JSK vs PR: பவுலிங்கிலும் கில்லிடா! டி20யில் மிரட்டலாக பந்துவீசிய ஜோ ரூட் - மிரண்டு போன டுப்ளிசிஸ் டீம்!
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் எஸ்.ஏ.20 கிரிக்கெட் தொடரில் பிரபல பேட்ஸ்மேன் ஜோ ரூட் அபாரமாக பந்துவீசி ஜோபர்க் சூப்பர் கிங்ஸிற்கு நெருக்கடி அளித்தார்.

இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவது போல, தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டுப்ளிசிஸ், பார்ஸ்டோ, மில்லர், ரூட், கான்வே போன்ற முன்னணி வீரர்கள் ஆடி வருகின்றனர்.
சுழலில் மிரட்டிய ஜோ ரூட்:
இந்த தொடரில் நேற்று ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. டுப்ளிசிஸ், கான்வே, பார்ஸ்டோ, மொயின் அலி போன்ற பலமான வீரர்களை கொண்ட ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை பார்ல் ராயல்ஸ் அணி தனது பந்துவீச்சால் தடுமாற வைத்தது. குறிப்பாக, சுழல் தாக்குதல் நடத்தி ஜோபர்க் அணியைத் தடுமாற வைத்தனர்.
ஃபோர்டுய்ன், மாபாகா, முஜுப் போன்ற முழு நேர பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது பகுதி நேர பந்துவீச்சாளரான ஜோ ரூட் அற்புதமாக பந்துவீசினார். அவர் மொத்தம் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். டி20 கிரிக்கெட்டில் 4 ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுப்பது என்பது பாராட்டத்தகுந்தது. மேலும், மொயின் அலியையும் அவுட்டாக்கினார்.
பார்ல் ராயல்ஸ் வெற்றி:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜோபர்க் அணி 140 ரன்கள் எடுத்து அவுட்டாகியது. இலக்கை நோக்கி ஆடி பார்ல் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 150 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியின் வான் பூரென் 44 ரன்களையும், டேவிட் மில்லர் 40 ரன்களையும் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகிய ரூட் டெஸ்ட் போட்டிகளில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உலா வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சிலும் அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், தற்போது சர்வதேச அளவில் டி20 போட்டியில் ஆடுவதில்லை. இந்த சூழலில், எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
34 வயதான ரூட் 152 டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்டுகளையும், 171 ஒருநாள் போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும், 32 டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச அளவில் ஜோ ரூட் 2019ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்காக அவர் டி20 போட்டிகளில் ஆடவில்லை. ஒருநாள் போட்டிகளிலும் அவர் 2023ம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஆடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே அவர் ஆடி வருகிறார்.
தற்போது வரை எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 3வது இடத்தில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

