ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Textile Ministry: பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்காக்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஜவுளித்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் துறைகளில் ஒன்றாக ஜவுளித்துறை திகழ்கிறது. இதன் மூலம் 45 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரடியாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். ஜவுளித் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆயத்த ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்கள் திட்டம் நவீன, ஒருங்கிணைந்த பெரிய அளவிலான, உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வகைசெய்கிறது. இது முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.
ஜவுளி பூங்காக்கள்:
ஜவுளித்துறையின் ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலிக்கும் ஒருங்கிணைந்த பெரிய அளவிலான, நவீன தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க, தமிழ்நாடு (விருதுநகர்), தெலங்கானா (வாரங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கலபுராகி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ) மற்றும் மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களில் பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்காக்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பூங்காக்கள் ஜவுளித் துறையை உலக அளவில் போட்டியிடக்கூடிய தன்மையை பெறவும், அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கும், மகளிர் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
முத்ரா கடன்:
கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும், பாரம்பரிய ஜவுளிகள் நிறைந்த பகுதிகளைக் கண்டறியவும் 2019 ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கைத்தறித் துறையை ஊக்குவிக்க, ஜவுளி அமைச்சகம் நாடு முழுவதும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், மூலப்பொருள் வழங்கல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேற்கண்ட திட்டங்களின் கீழ், தகுதி வாய்ந்த கைத்தறி முகவர்கள் / நெசவாளர்களுக்கு மூலப்பொருட்கள், பொது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் கைத்தறிப் பொருட்களை விற்பனை செய்தல், போன்றவற்றிற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. நெசவாளர் முத்ரா கடன்களும் வழங்கப்படுகின்றன.
நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் தொகையில் 20 சதவீதம் அல்லது தனிநபர் நெசவாளர் / நெசவாளர் தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக ரூ.25,000 மற்றும் கைத்தறி நிறுவனங்களுக்கு ரூ.20 இலட்சம் தொகை, 7 சதவீதம் வரை மானியத்துடன் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு கடன் உத்தரவாதக் கட்டணத்துடன் வழங்கப்படுகிறது.
ஆன்லைன் விற்பனை:
இணையதளம் மூலம் நெசவாளர்கள் தங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 மின்னணு வர்த்தகத் தளங்கள் ஜவுளி அமைச்சகத்தால் கொள்கை கட்டமைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய கைத்தறி ஜவுளித் தொழிலைப் பாதுகாத்து மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொல்கத்தா, தில்லி, மும்பை, வாரணாசி, அகமதாபாத், ஜெய்ப்பூர், புவனேஸ்வர், குவஹாத்தி, காஞ்சிபுரம், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இந்தூர், மீரட், நாக்பூர் மற்றும் பானிபட் ஆகிய இடங்களில் உள்ள நெசவாளர் சேவை மையங்களில் வடிவமைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புவிசார் குறியீடு (ஜிஐ) சட்டம், 1999-ன் கீழ் பாரம்பரிய ரகங்கள் மற்றும் வடிவமைப்புகளை பாதுகாக்க ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவற்றை புவியியல் குறியீடு சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கருத்தரங்குகள், பயிலரங்குகள் போன்றவற்றை நடத்தவும் அமைச்சகம் நிதி உதவி அளிக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

