அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞராக இருப்பதால் விளையாட்டில் மாணவர்கள் உத்வேகத்துடன் உள்ளனர் - நடிகர் ஜீவா
தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞராக இருப்பதால் தமிழகத்தில் விளையாட்டில் மாணவர்கள் உத்வேகம் அடைந்திருக்கினனர்.
திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் 21-வது தேசிய அளவிலான இளையோர் தடகளப்போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் 28 மாநிலங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டி பகல், இரவாக நடைபெற்று வருகின்றது. இதில் 100 மீட்டர், 500 மீட்டர், 1500 மீட்டர் உள்ளிட்ட ஓட்ட பந்தயங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் என்பன உள்ளிட்ட 40 வகையான போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கி பேசினார்.
துரோணாச்சார்யார் விருது பெற்ற ரமேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொண்டு போட்டிக்கான ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். மேலும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு நடிகர் ஜீவா பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வீர வீராங்கனைகள் தகுதியின் அடிப்படையில் வெற்றி பெறும் வீராங்கனைகள் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக நடிகர் ஜீவா பேசுகையில்;
தமிழக விளையாட்டு வீரர்கள் ஆசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர். இந்திய அணியில் தமிழக வீரர்கள் அதிகளவில் இடம் பெறுகின்றனர். தடகள சங்கம் சார்பில் மேலும் இது போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி தடகள வீரர்களை உருவாக்க வேண்டும். இதற்கு திரை துறையின் சார்பில் எப்பொழுதும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். தமிழகத்தில் விளையாட்டு துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்தியாவிற்கு முன்உதாரணமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் தற்போது கிடைத்து வருகின்றது. தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞராக இருப்பதால் தமிழகத்தில் விளையாட்டில் மாணவர்கள் உத்வேகம் அடைந்திருக்கின்றனர். தென் கொரிய ஏசியன் விளையாட்டிலும் கோப்பைகளை அதிக அளவில் வாங்குவார்கள். விளையாட்டு வீரர்கள் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதிகளவில் டிவி, செல்போனை பார்க்கக் கூடாது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம். இந்த நாள் திரும்பவும் வராது. இந்த நாட்களை அனுபவித்து வாழ வேண்டும் என்று பேசினார்.