’78 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த போலீஸ்’ எங்கே ? ஏன் தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 47 பேரும் நடப்பாண்டில் 31 பேர் என 78 பேரை தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்து எஸ்.பி அதிரடி காட்டி வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் மூவரை, பொதுமக்களுக்கும், சமூக அமைதிக்கும் அச்சுறுத்தலாக விளங்கியதால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பட்டபகலில் நடைபெற்ற கொலை சம்பவம்
கடந்த 24.06.2025 அன்று மதியம் 2.20 மணியளவில், நீடூர், மாதா கோயில் தெருவைச் சேர்ந்த 34 வயதான முகமது ஹாலீக் என்பவர் தனது இரு நண்பர்களுடன் நீடூர் JMH நிக்காஹ் மஹால் எதிரில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களில் ஒருவர், தான் கொண்டு வந்த அரிவாளால் முகமது ஹாலீக்கை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முகமது ஹாலீக் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காவல்துறையினர் விசாரணை
இந்நிலையில் இதுதொடர்பாக முகமது ஹாலீக்கின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார், வழக்கின் புலன் விசாரணையை மேற்கொண்டார். இந்த சூழலில், படுகாயமடைந்த முகமது ஹாலீக் 25.06.2025 அன்று அதிகாலை மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
குற்றவாளிகள் கைது
வழக்கின் விசாரணையில், இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் இதில் தொடர்புடைய நபர்களாக
- சரண்ராஜ் (28), த/பெ. செல்வம், தோப்பு தெரு, மேமாத்தூர், செம்பனார்கோயில்
- குண்டு விஜய் (எ) விஜய் (28), த/பெ. ரமேஷ், ஆறுபாதி, செம்பனார்கோயில்
- விஜயகாந்த் (எ) வடிவேலன், த/பெ. வரதராஜன், நாகப்பன் நகர், தில்லையாடி
- விக்னேஷ் (25), த/பெ. விஜேந்திரன், தோப்பு தெரு, நீடூர்
ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தடுப்பு காவல் சட்டம்
கைது செய்யப்பட்ட நபர்களான சரண்ராஜ், விஜய், மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களின் தொடர் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு, இவர்களை தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் சரண்ராஜ், விஜய், மற்றும் விக்னேஷ் ஆகிய மூவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை அடுத்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல் ஆளிநர்கள் மேற்கண்ட மூவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறையில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில், பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்த 17 நபர்கள், திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 03 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 08 நபர்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 01 நபர் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 02 நபர்கள் என மொத்தம் 31 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 47 நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை, குற்றவாளிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளதுடன், மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் காவல்துறையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.






















