ED Raids Ambani: இதை எதிர்பார்க்கல..! அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை - என்ன காரணமாம்?
ED Raids Ambani: மும்பையில் உள்ள அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

ED Raids Ambani: எஸ்பிஐ வங்கியின் மோசடி குற்றச்சாட்டை தொடர்ந்து அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
அம்பானி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை:
மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் இயக்குனர் அனில் அம்பானியை 'மோசடிதாரர்கள்' என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை நடவடிக்கையில் அம்பானியின் தனிப்பட்ட வீடு சேர்க்கப்படவில்லை. இருப்பினும், டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து அமலாக்கத்துறை குழுக்கள் அவரது குழும நிறுவனங்களுடன் தொடர்புடைய பல இடங்களுக்குச் சென்றன. பணமோசடியுடன் தொடர்புடைய நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது.
ஒழுங்குமுறை ஆணையங்களின் புகார்கள்:
தேசிய வீட்டுவசதி வங்கி, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), தேசிய நிதி அறிக்கை ஆணையம் (NFRA), பாங்க் ஆஃப் பரோடா மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) பதிவு செய்த இரண்டு FIRகள் உள்ளிட்ட பல முக்கிய ஒழுங்குமுறை மற்றும் நிதி அமைப்புகளின் குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, அம்பானி குழுமத்துடன் தொடர்புடைய மூத்த வணிக நிர்வாகிகள் விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக தேடப்பட்டு வருகின்றனர். தொடபுடைய நிறுவனங்களின் மூலம் பொது நிதியை திருப்பிவிடுவதற்கான திட்டமிடப்பட்ட சதியை கண்டுபிடித்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகிறது. வங்கிகள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொது நிறுவனங்கள் உட்பட பல பங்குதாரர்கள் இந்த செயல்பாட்டில் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் அல்லது ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டு வருகிறது.
எஸ் பேங்க் கடன்கள்:
விசாரணையில் 2017 மற்றும் 2019 க்கு இடையில் எஸ் பேங்கில் இருந்து பெறப்பட்ட ரூ.3,000 கோடி கடன் புகாரும் தொடர்கிற்து. இந்தக் கடன்கள் ரிலையன்ஸ் குழுமத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுவதற்கு முன்பு, வங்கியின் விளம்பரதாரர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிறுவனங்களுக்கு பெரிய தொகைகள் மாற்றப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எஸ் பேங்கின் முன்னாள் நிர்வாகிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) தொடர்பான புதிய தகவல்கள் வெளியானது முதல் விசாரணை மேலும் வேகம் பெற்றது. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடன் வழங்கல்களில் திடீர் மற்றும் கூர்மையான உயர்வு ஆகும், இது 2017–18 நிதியாண்டில் ரூ.3,742.60 கோடியிலிருந்து 2018–19 ஆம் ஆண்டில் ரூ.8,670.80 கோடியாக உயர்ந்தது. இதையடுத்து வங்கி நிதியில் மோசடி செய்ததாக எஸ்பிஐ வங்கி முறைப்படி புகாரளிக்கவும் திட்டமிட்டு வருகிறது.





















