தஞ்சாவூர் பூச்சந்தை சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயில்தான் 4ம் படை வீடு. சுவாமி மலையில் போல் இங்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பூச்சந்தை சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் உள்ள பூச்சந்தை அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை உள்ளடக்கிய கந்த சஷ்டி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக உற்சவர் சுப்பிரமணியசுவாமி, வள்ளி - தெய்வாணையுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மங்களவாத்தியங்கள் முழங்க மயில் சின்னம் அச்சிட்ட கொடி ஏற்றப்பட்டது. அப்போது குழுமியிருந்த பக்தர்கள் ஹரோகரா முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து நேற்று (நவ.3) மான் வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழாவில் நாளை பூத வாகனத்திலும், வரும் 5-ம் தேதி யானை வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. வரும் 6ம் தேதி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி வீதியுலா நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வான 7- ம் தேதி இரவு 7 மணிக்கு ஆடு,மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பட்டு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தொடர்ந்து 8-ம் தேதி திருக்கல்யாணமும், 9-ம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 10-ம் தேதி திருத்தேரும், 11 -ம் தேதி தீர்த்தவாரியும், 12-ம் தேதி விடையாற்றியும் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை உபயதாரர்களுடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.
இதேபோல் தஞ்சாவூரில் உள்ள மற்ற முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா தொடங்கியது. தஞ்சாவூரிலும் முருகனுக்கு அறுபடை கோயில்கள் இருக்கு தெரியுங்களா. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தஞ்சை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், இந்த ஆறு படைவீடுகளுக்கும் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம்.
முதல் படைவீடு: தஞ்சை மேல அலங்கம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில்தான். மூலவர், குன்றின் மேல் வீற்றிருப்பது போல் உயரமான இடத்தில் உள்ளதால் ‘திருப்பரங்குன்றம்’ என்று அழைக்கப்படுகிறது. வள்ளி - தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். விநாயகர், இடும்பன், சிவன், பார்வதி, சிவலிங்கம் திருமேனிகளும் உள்ளன. அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது.
தஞ்சை பூக்கார தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில்தான் இரண்டாம் படைவீடு. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் முருகப்பெருமான் மனைவிகள் இன்றி தனித்து காணப்படுகிறார். இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடக்கிறது.
தஞ்சை சின்ன அரிசிக்கார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில் மூன்றாம் படைவீடு. இந்திரன் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. முருகனின் அருகில் மயில் வாகனம் காணப்படும். ஆனால் இங்கு முருகப்பெருமான் சன்னதியில் யானை உள்ளது அரிய காட்சி. உற்சவர் சிலை ஐம்பொன்னால் ஆனது. பொதுவாக நவக்கிரக சன்னிதிகள் வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்திருக்கும். ஆனால் இங்கு தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. அதுவும் ராகுவும், கேதுவும் இடம் மாறி இடம் பெற்றுள்ளன.
தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயில்தான் 4ம் படை வீடு. சுவாமி மலையில் போல் இங்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் இருப்பதை போல பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், நவக்கிரக தலங்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பிரம்மா, ஆஞ்சநேயர் கணபதி, விஷ்ணு துர்க்கை, இடும்பன் என முருகனைத் தவிர 12 சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு சன்னதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் உள்ளது தனிச்சிறப்பு. தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில் 5ம் படைவீடு. இங்கு வள்ளி- தெய்வானையுடன் சுவாமி அருள்பாலிக்கிறார். இந்த கோயில் கட்டப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு முதலில் வேல் மட்டும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் வள்ளி - தெய்வானையுடன் கூடிய சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆறாம் படைவீடு. மன்னர் சரபோஜி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முருகப்பெருமான் கனவில் வந்து சொன்னது போல் பழனி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து நிறுவியிருக்கிறார்கள். பழனி முருகன் கோவில் இருப்பதைப் போல இது அமைந்திருந்தாலும், இதனை ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்று பக்தர்கள் வழிபடுகின்றனர்