இங்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படுமா?..பேசுவாங்களா? பேசணுங்க: மக்கள் எதிர்பார்ப்பு இதுதான்
அரியலுாரில் இயங்கும் சிமென்ட், சர்க்கரை ஆலைகளில் இருந்து பெரம்பலுார், சேலம் மார்க்கமாக சரக்கு ரயில்களில் எளிதில் எடுத்து செல்லலாம். அதுபோல, தஞ்சாவூர் மார்க்கத்திலும் எளிதாக பயணிக்க முடியும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் - அரியலுார், பெரம்பலூர் புதிய ரயில் பாதை அமைக்கப்படுமா? இதற்காக தமிழக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் பேசுவாங்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழக எம்.பி.க்கள், வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மிக முக்கியமான நகரமும், சிமெண்ட் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அரியலூர் - தஞ்சாவூருக்கும், பெரம்பலுார் வழியாக சேலத்திற்கும் புதிய ரயில் பாதை அமைக்க, மத்திய அரசிடம் எம்.பி.,க்கள் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை உச்சத்தை தொட்டு வருகிறது.
சென்னை - திருச்சி ரயில்வே மார்க்கத்தில், அரியலுார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இவ்வழியாக தினமும், 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. தொழிற்சாலை நகரான அரியலுார் மற்றும் தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், செந்துறை பகுதியில் சிமென்ட் ஆலைகள் உட்பட பல தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் இப்பகுதிக்கு வந்து செல்பவர்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். நேர விரயத்தை குறைக்கவும், பயணத்தை எளிதாக்கவும் மக்களுக்கு ரயில் பயணம் தான் பர்ஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது.
அரியலுாரில் இருந்து தஞ்சாவூர், 44 கி.மீ., துாரம். இங்கிருந்து ரயில் பாதை இல்லாததால், அரியலுாரில் இருந்து சமயபுரம் - திருச்சி வழியாக தஞ்சாவூர் செல்ல வேண்டியுள்ளது. இதனால், ஒரு மணி நேரத்தில் பயணிக்க வேண்டிய இடத்திற்கு, ரயிலில், 3:36 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. இது நேர விரயத்தை மட்டுமின்றி, பண விரயத்தையும் ஏற்படுத்துக்கிறது.
அதேபோல, அரியலுாரில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள பெரம்பலுாருக்கு ரயில் பாதை இல்லாததால், சாலை மார்க்கமாக செல்ல வேண்டியுள்ளது. அரியலுார் - பெரம்பலுார் இடையே சாலை மார்க்கமாக, 39 நிமிடத்தில் செல்ல முடியும்.
ஆனால், தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள் மிகுந்த சிரமமடைகின்றன. பெரம்பலுாரில் மருத்துவக்கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் தினசரி ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
அரியலுாரில் இருந்து தஞ்சாவூருக்கும், பெரம்பலுாரில் இருந்து துறையூர், ஆத்துார் மார்க்கமாக சேலம் வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்கள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்திட்டம் தொடர்பாக எந்த ஆய்வறிக்கையும் தயாராகவில்லை என்பதுதான் மக்களின் வேதனை.
நாமக்கல் - அரியலுார் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு 2018ல், முதற்கட்ட சர்வே பணி துவங்கியது. ஆனால், இதுவரை ஆய்வுக்கான அறிவிப்பு கூட வரவில்லை. அதேபோல, 2013 - 14ல், அரியலுார் - பெரம்பலுார் - துறையூர் -- நாமக்கல் போன்றவற்றை இணைக்கும் விரிவான திட்ட அறிக்கை குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தும், நிர்வாக காரணங்களால் கைவிடப்பட்டது.
அரியலுார் - தஞ்சாவூர்; அரியலுார் - பெரம்பலுார் - சேலம் மார்க்கத்தில் புதிய ரயில் பாதை அமைப்பதால், ரயில்வே நிர்வாகத்துக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக, அரியலுாரில் இயங்கும் சிமென்ட், சர்க்கரை ஆலைகளில் இருந்து பெரம்பலுார், சேலம் மார்க்கமாக சரக்கு ரயில்களில் எளிதில் எடுத்து செல்லலாம். அதுபோல, தஞ்சாவூர் மார்க்கத்திலும் எளிதாக பயணிக்க முடியும்.
கடந்த 2014ல், தஞ்சாவூர் எம்.பி.,யாக இருந்த பரசுராமன், தஞ்சாவூர் - அரியலுார் ரயில் பாதை திட்டம் குறித்து லோக்சபாவில் வலியுறுத்தினார். இதனால், தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்ல 100 கி.மீ., பயண துாரம் குறையும். இதேபோல, 2019ல் பெரம்பலுார் எம்.பி.,யாக இருந்த பச்சமுத்து, அரியலுாரில் இருந்து பெரம்பலுார் - துறையூர் வழியாக சேலம் வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என, மத்திய ரயில்வே அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பலன் என்னவோ பூஜ்யம்தான்.
தஞ்சாவூர், பெரம்பலுார், சிதம்பரம், திருச்சி, சேலம் எம்.பி.,க்கள் இணைந்து மத்திய ரயில்வே அமைச்சரை வலியுறுத்தி, தஞ்சாவூர் - பெரம்பலுார் மார்க்கத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் பேச வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எம்.பி.க்கள் பேசுவார்களா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

