ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
நதி நீர் பிரச்சினைகள் குறித்து அண்டை மாநிலங்களுடன் பேசினால் நிலைமை கெட்டுப்போய்விடும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அண்டை மாநில முதலமைச்சர்கள் எல்லாம் நெருக்கமாக இருக்கும்போது அதை வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்திற்கான நதிநீர் பிரச்சினையை தீர்த்திருக்கலாமே என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டத்துக்கு மற்ற மாநில முதலமைச்சர்கள் வருகை புரிந்தனர். அண்டை மாநில முதலமைச்சர்கள் எல்லாம் நெருக்கமாக இருக்கும்போது அதை வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்திற்கான நதிநீர் பிரச்சினையை தீர்த்திருக்கலாமே” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “அண்டை மாநில முதலமைச்சர்கள் தமிழகம் வந்தபோது நதிநீர் பிரச்சினை குறித்து பேசாதது ஏன் என கேட்கின்றனர்.
அண்டை மாநிலங்களுடன் பேசினால் நதிநீர் விவகாரத்தில் நியாயம் கிடைக்காது. எடப்பாடி பழனிசமி தனது ஆட்சியின்போது இணக்கமாக இருக்கவில்லையா? பேசி பேசி பார்த்துதான் தற்போது உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். உச்சநீதிமன்றமே நமது உரிமைகளுக்கு தீர்வு அளித்துள்ளது. இருவரும் பேசினால் நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என நீதிமன்றம் கைவிட்டு விடும்.
வி.பி.சிங் காலத்திலேயே பேசி பார்த்தோம். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. கர்நாடகாவில் நம் மாநிலத்தவர்கள் பலர் வசிக்கின்றனர். நாம் ஒரு வேகத்தில் பேசி அங்கே அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் வந்துவிடக்கூடாது.
தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் எந்த கொம்பனாலும் எந்த அணையும் கட்ட முடியாது என மத்திய அரசின் வனத்துறை அறிவித்துவிட்டது.
காவிரி ஆணையத்துக்கு மேகதாது குறித்து பேச உரிமை கிடையாது என்றோம். நம் எதிர்ப்பால் திட்ட அறிக்கையை ஆணையம் திருப்பி அனுப்பியது.
வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார். ரூ.374 கோடியில் 15 மாவட்டங்களில் 21 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமடையில் ரூ.10 கோடியில் ஒரு நீரொழுங்கி கட்டப்படும்.
தாமிரபரணி – கருமேனி ஆற்றுத்திட்டத்தை பத்து ஆண்டுகளாக கிடப்பில் போட்டீர்கள். நாங்கள் வந்து அதை செய்து முடித்தோம். நாங்கள் மாற்றான் தாய் மனதுடன் செயல்படவில்லை. நீங்கள் தான் அப்படி செய்தீர்கள்” என சாடினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

