CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
IPL 2025 CSK vs KKR: 2012ம் ஆண்டு சென்னை அணியின் இறுதிப்போட்டியின் கோப்பை கனவை கொல்கத்தா அணியின் மன்வீந்தர் பிஸ்லா தனது அதிரடியால் கலைத்தார்.

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் வரும் நாளை மறுநாள் தொடங்குகிறது. 45 வயதான தோனிக்கு இது கடைசி சீசன் என்று கருதப்படுவதால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப சிஎஸ்கே வீரர்களும், ரசிகர்களும் விரும்புகின்றனர்.
சென்னை - கொல்கத்தா மோதல்:
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணி 10 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில், 2012ம் ஆண்டு தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னையில் மே 27ம் தேதி நடந்த இறுதிப்போட்டியில் மைக்கேல் ஹஸ்ஸி 54 ரன்களும், முரளி விஜய் 42 ரன்களும், சுரேஷ் ரெய்னா 73 ரன்களும் எடுக்க சென்னை அணி 190 ரன்களை எடுத்தது.
ஆட்டத்தை மாற்றிய பிஸ்லா:
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கம்பீர் 2 ரன்னில் அவுட்டானார். கம்பீர் அவுட்டானதால் மன்வீந்தர் பிஸ்லா - காலீஸ் ஜோடி சேர்ந்தனர். அப்போது 27 வயதான மன்வீந்தர் பிஸ்லா சென்னையின் ஆசையை சிதறடித்தார். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அவர் விளாச அவருக்கு மறுமுனையில் ஜேக் காலீஸ் ஒத்துழைப்பு தந்தார்.
இந்த ஜோடியின் அதிரடியால் கேகேஆர் ரன் எகிறியது. சிறப்பாக ஆடிய பிஸ்லா அரைசதம் விளாசினார். கொல்கத்தா அணி 139 ரன்கள் எடுத்திருந்தபோது பிஸ்லா 48 பந்துகளில் 8 பவுண்டரி 5 சிக்ஸருடன் 89 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய சுக்லா 3 ரன்னில் அவுட்டாக மறுமுனையில் ஜேக் காலீஸ் பட்டாசாய் வெடித்தார். 19வது ஓவரின் 5வது பந்தில் ஜேக் காலீஸ் 69 ரன்களில் அவுட்டானார். அவர் 49 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட்டானார்.
த்ரில் வெற்றி:
இதனால், கடைசி 7 பந்துகளில் 16 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. கடைசி ஓவரை ப்ராவோ வீசினார். அப்போது 4 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மனோஜ் திவாரி பவுண்டரி விளாசினார். மீண்டும் மனோஜ் திவாரி அதே இடத்தில் பவுண்டரி விளாச 2 பந்துகளை மீதம் வைத்து கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்காக அபாரமாக ஆடி 89 ரன்கள் விளாசிய பிஸ்லா ஆட்டநாயகன் விருது பெற்றார். அந்த போட்டியில் தனி ஆளாக போராடிய பிஸ்லா அந்த நாள் சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை மைதானத்தில் இதுவரை 2 முறை இறுதிப்போட்டியில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்தாண்டு நடந்த இறுதிப்போட்டியிலும் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

