South Korea: ட்ரெய்னிங்னா அப்படி ஓரமா போய் பாம் போட வேண்டியதுதான, இப்படியா ஊருக்குள்ள போடுறது.?!
தென் கொரியாவில், விமானப்படை தவறுதலாக ஊருக்குள் வெடிகுண்டுகளை வீசியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தென் கொரியாவில், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்த போர் பயிற்சியில் ஈடுபட்டபோது, ராணுவ விமானம் ஒன்று தவறுதலாக ஊருக்குள் வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இதனால் 7 பேர் காயமடைந்துள்ள நிலையில், அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டு ராணுவ பயிற்சியில் தவறுதலாக வீசப்பட்ட வெடிகுண்டுகள்
தென் கொரியாவின் போச்சான் பகுதியில், தென் கொரிய ராணுவமும், அமெரிக்க ராணுவமும் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அப்போது, KF16 ரக போர் விமானம் ஒன்று, 8 MK82 ரக வெடிகுண்டுகளை, நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விடுத்து, தவறுதலாக வட கொரிய எல்லையிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில், உள்ள தென் கொரிய கிராமம் ஒன்றிற்குள் வீசியுள்ளது. இதில் 8 பேர் காயமடைந்த நிலையில், அதில் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவீச்சில், ஒரு தேவாலயமும், இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.
தென் கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே, இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள “சுதந்திர கேடயம்“ என்ற ராணுவ பயிற்சிக்கு முன்னதாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
விசாரணைக் குழுவை அமைத்த ராணுவம்
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்தும், அவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும், ராணுவம் அறிக்கை வெளியிட்டள்ளது.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரிக்க, விசாரணைக் குழுவை அமைத்துள்ள ராணுவம், தவறுதலாக குண்டு வீசப்பட்டதற்கான காரணங்களை கண்டறிவதுடன், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவது மற்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே வடகொரியாவிலிருந்து அச்சுறுத்தல்கள் உள்ளதால், தென் கொரியாவில் குறிப்பிடத்தக்க அளவு ராணுவத்தை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. அவர்களின் கூட்டு பயிற்சியின்போது ஏற்பட்ட இந்த விபத்தால், அந்த கிராமப்புறப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

