Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைக்கும் அளவிற்கு, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அது என்ன தெரியுமா.?

வாஷிங்டனில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக இந்தியர்கள் குறித்தும் அவர் கூறியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பதை தற்போது பார்க்கலாம்.
“இந்தியர்களை வேலைக்கு எடுக்காதீர்கள்“
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பெரிய நிறுவனங்கள் தொழில்நுட்ப வேலைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இந்தியர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து பேசிய அவர், “நாம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும். அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அமெரிக்கர்கள், தாங்கள் கவனிக்கப்படவில்லை என்று உணர்கிறார்கள்“ என்று ட்ரம்ப் கூறினார்.
“அமெரிக்க நிறுவனங்கள் தேச பக்தி அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்“
அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப ஜாம்பவான்கள், தேசிய நலன்களுடன் ஒத்துப்போக வேண்டும் என்றும், அந்நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளில் தேச பக்தி அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், சீனாவிற்கு உற்பத்தியை அவுட்சோர்சிங் செய்து, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக, அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களை ட்ரம்ப் கடிந்துகொண்டார்.
நாட்டில் கிடைக்கும் சுதந்திரததை பயன்படுத்தும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்கின்றன என்று குற்றம்சாட்டினார்.
“சொந்த மக்களை நிராகரிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்“
மேலும், அமெரிக்க மக்களின் வாய்ப்புகளைப் பற்றி அந்நிறுவனங்கள் கவலைப்படவில்லை என்றும், அவர்கள் தங்கள் சக குடிமக்களை இங்கேயே உள்நாட்டிலேயே பணிநீக்கம் செய்து தணிக்கை செய்கிறார்கள் எனவும் சாடினார்.
தனது நிர்வாகத்தின் கீழ் அந்த நாட்கள் முடிந்துவிட்டதாக கூறிய ட்ரம்ப், இதுபோன்ற கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
‘அமெரிக்கா முதலில்‘ என்ற உத்தி
அமெரிக்காவிற்கு ஆதரவாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முழுமையாக இருக்க வேண்டும் என்று கூறிய ட்ரம்ப், நிறுவனங்கள் அமெரிக்காவை முதன்மைப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஏஐ பந்தயத்தில் வெற்றி பெற, சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு புதிய தேசபக்தி தேவை என்றும், அங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டை முதன்மைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
3 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்ட ட்ரம்ப்
இந்த உச்சிமாநாட்டின்போது, அமெரிக்க செயற்கை நுண்ணறிவு(AI) துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 3 நிர்வாக உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அதில், உலகளாவிய ஏஐ வளர்ச்சியில் அமெரிக்க தலைமையை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட அமெரிக்காவின் ஏஐ செயல் திட்ட என்ற தலைப்பில், வெள்ளை மாளிகையின் விரிவான செயல் திட்டமும் அடங்கும்.





















