எம்.ஆர் ராதாவின் மனைவியை இரண்டாம் திருமணம் செய்தது ஏன்? நடிகர் வி கே ராமசாமியின் மறைந்த பக்கம்...
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகரான வி.கே ராமசாமி நடிகர் எம் ஆர் ராதாவின் மனைவி ரமணியம்மாளை இரண்டாம் திருமணம் செய்துகொண்டது ஏன் தெரியுமா ?

வி.கே ராமசாமி
பிளாக் & வைட் காலம் முதல் வண்ணப் படங்கள் வரை கிட்டதட்ட 55 ஆண்டுகள் திரைப்படத் துறையில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் வி.கே ராமசாமி. சிறந்த நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்டவர். தனது 7 வயதில் நடிக்கத் தொடங்கிய வி கே ராமசாமி எம்.ஜி.ஆர் , சிவாஜி கணேசன் , ரஜினி , கமல் , இளம் நடிகர் சிம்பு வரை இணைந்து நடித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்ட வி.கே ராமசாமி ஒரு தீவிர சுதந்திர போராட்ட வீரரும் கூட. தனது 15 வயதில் 'தியாக உள்ளம்' என்கிற மேடை நாடகத்தில் பங்கர் சன்முகம் பிள்ளை என்கிற கதாபாத்திரத்தில் வி.கே ராமசாமி நடித்தார். இந்த கதாபாத்திரம் பலரால் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில் மெய்யப்ப செட்டியான் இந்த நாடகத்தை 'நாம் இருவர்' என்கிற படமாக தயாரித்தார். அதன் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார் வி.கே ராமசாமி , நகைச்சுவை , குணச்சித்திர கதாபாத்திரம் , வில்லன் என வெவ்வேறு கதைகளுக்கு ஏற்றபடி தனது நடிப்பையும் உடல்மொழியையும் மாற்றினார் விகேஆர். தனது சக நடிகர்களான எம்.ஜி.ஆர் , சிவாஜி கணேசனுடன் நெருங்கிய நட்புறவிலும் இருந்தவர். நடிகராக மக்களால் கொண்டாடப்பட்ட வி.கே ராமசாமியின் தனிப்பட்ட வாழ்க்கையும் அதே அளவு சுவாரஸ்யங்களால் நிறைந்தது. குறிப்பாக நடிகர் எம்.ஆர் ராதாவின் முன்னாள் மனைவி ரமணியம்மாளை வி கே ராமசாமி இரண்டாம் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு.
ரமணியம்மாளை இரண்டாவது திருமணம் செய்தது ஏன்?
ராமசாமி சூர்யாகுமாரி என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு ரகுநாத் மற்றும் ராஜேந்திரன் என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். இப்படியான நிலையில் நடிகர் எம் ஆர் ராதாவின் தனது மனைவி ரமணியம்மாளை பிரிந்தார். கணவனை பிரிந்த ரமணியம்மாள் தனது இரு மகன்களை வளர்க்க சிரமப்பட்டு வந்ததை பார்த்த வி.கே ராமசாமி அவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். ரமணியம்மாளின் மகன்கள் ரகு மற்றும் ரவியை தனது சொந்த மகன்களாக வளர்த்து ஆளாக்கினார். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது சொந்த மகன்களுக்கு கொடுத்த அதே கவனத்தையும் அக்கறையையும் ரமணியம்மாளின் இரு மகன்களுக்கும் கொடுத்தார். தங்கள் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்கு வழிகாட்டுதலையும் அவர்களுக்கு வழங்கினார் வி.கே ராமசாமி.





















