Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
ஒரு பெண் என்னதான் தோழியாக இருந்தாலும், அவள் சம்மதம் இல்லாமல் அவளுடன் உடலுறவு கொள்ளும் உரிமையை ஆணுக்கு வழங்காது என, வழக்கு ஒன்றில் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, ஒரு பெண் ஒரு ஆணுடன் நட்பாக இருந்தாலும், அவளுடைய சம்மதம் இல்லாமல், அவளுடன் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியுடன் நட்பாக பழகி பாலியல் உறவு கொண்ட கட்டிட தொழிலாளி
டெல்லி விகாஸ்புரி பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர், அவர் வேலை செய்துவந்த கட்டிடத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
சிறிது நாட்கள் நட்பாக பழகிய நிலையில், அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2023 ஏப்ரல் மாதம் தொடங்கி, நவம்பர் மாதம் வரை, அந்த சிறுமியை மிரட்டிய அந்த கட்டிடத் தொழிலாளி, பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.
பெற்றோர் புகாரில் கட்டிட தொழிலாளி மீது நடவடிக்கை
அந்த கட்டிடத் தொழிலாளி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விஷயம், அவளது பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்த தொழிலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, கட்டிடத் தொழிலாளி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தான் பாலியல் உறவில் ஈடுபட்டபோது, அந்த பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்திருந்தது என்றும், அவருடன் நட்பாக பழகி, அவரது சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
“பெண்ணிடம் நட்பாக இருந்தாலும் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள உரிமை கிடையாது“
இந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில், நீதிபதி கிரீஷ் கத்பாலியா அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, “தோழியாக இருந்தாலும், அவளது சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை கிடையாது“ என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கல்விச் சான்றிதழ்களின் அடிப்படையில், சம்பவம் நடந்தபோது, அவர் மைனர் சிறுமியாக இருந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் சம்மதத்துடன் உடலுறவு கொண்டிருந்தாலும், அது சட்டப்படி குற்றமாகவே கருதப்படும் எனக் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதோடு, சிறுமியின் எதிர்ப்புகளை மீறி, மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எஃப்.ஐ.ஆரும், சிறுமியின் வாக்குமூலமும் கூறவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது இனிமையான பேச்சால் சிறுமியுடன் நட்பு கொண்டார் என்று எஃப்.ஐ.ஆரில் இருப்பதாக அரசு வழக்கறிஞர் கூறியதால், அதை ஒருமித்த உறவு வழக்காக பார்க்க முடியவில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, கட்டிடத் தொழிலாளியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நிதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.




















