ஆணா? பெண்ணா? கால்பந்து வீராங்கனைகளின் மார்பகங்களை விமர்சித்த தான்சானியா அதிபர்!
கால்பந்து வீராங்கனைகளை மார்பை குறிப்பிட்டு , அவர்கள் ஆண்கள் போன்று உள்ளனர் என தான்சானியா பெண் ஜனாதிபதி சர்ச்சை பேச்சு பேசியுள்ளார்.
தட்டையான மார்பகங்களை கொண்ட கால்பந்து வீராங்கனைகள், திருமணம் செய்துகொள்ள கவர்ச்சியற்றவர்கள் என தான்சானியாவின் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் தெரிவித்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிராந்திய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தேசிய ஆண்கள் அணியின் வெற்றிபெற்றதை கொண்டாடும் விழாவில் தான்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியான சாமியா சுலுஹு ஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பெண்கள் விளையாட்டுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், ”கால்பந்து வீராங்கனைகளுக்கு மார்பு தட்டையாக இருப்பதால், அவர்கள் ஆண்கள் போன்று உள்ளனர். ஆனால், நீங்கள் அவர்களின் முகங்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்... கவர்ச்சிகரமான ஒருவரை திருமணம் செய்து கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். நல்ல குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணை விரும்புவீர்கள். ஆனால், பெண் கால்பந்து வீரர்களுக்கு அந்த குணங்கள் மறைந்துவிட்டன" என்று கூறினார்.
கால்பந்து வீராங்கனைகள் குறித்து அவர் மேலும் பேசியதாவது “இன்று அவர்கள் நாட்டிற்கு கோப்பைகளை வென்று வரும்போது எங்களை பெருமைப்படுத்துகிறார்கள், ஆனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை நாம் நினைத்தால் மோசமாக உள்ளது. அவர்களின் கால்கள் விளையாட முடியாமல் சோர்வடையும் போது, அவர்களுக்கு விளையாடுவதற்கான உடல்நலம் இல்லாதபோது, என்ன வாழ்க்கை வாழ்வார்கள்? திருமண வாழ்க்கை அவர்களுக்கு ஒரு கனவு போன்றது. ஏனென்றால் உங்களில் ஒருவர் அவர்களை மனைவியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றாலும், அவர்கள் ஒரு பெண்ணா அல்லது ஆணா என்று உங்கள் தாய் கேட்பார்." என்று கூறினார்.
ஹாசனின் இந்த சர்ச்சைக்குறிய கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள தான்சானியா எதிர்க்கட்சி கட்சி மகளிர் பிரிவின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கேத்தரின் ரூஜ், "பெண்கள் கால்பந்து வீரர்கள் குறித்து ஜனாதிபதியின் கருத்து அனைத்து பெண்களையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளது" என்று கூறினார்.
"எல்லா பெண்களும் மரியாதைக்கு உரியவர்கள். பெண் ஜனாதிபதி என அனைவராலும் வாழ்த்தப்படும் சுலுஹு சலாமியா, பெண் கால்பந்து வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். ஆப்பிரிக்க பெண்கள் தலைவர்கள் குழுமம் பெருமைப்பட்டுக்கொள்ளட்டும்" என தான்சானியா மாற்றத்துக்கான சிவில் சமூகக் குழுவின் நிறுவனர் மரியா சருங்கி ட்விட்டரில் விமர்சித்து உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜான் மகஃபுலியின் திடீர் மரணத்திற்குப் பிறகு மார்ச் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றார் சுலுஹு சலாமியா என்பது குறிப்பிடத்தக்கது.