ஆதிதிராவிடர் தெருவுக்கு முதல்முதலாக வந்த பேருந்து.. கற்பூரம் காட்டி வரவேற்ற கிராம மக்கள் - அரியலூரில் நெகிழ்ச்சி
வாளரக்குறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவுக்கு இதுநாள் வரை நேரடி போக்குவரத்து சேவை என்பதே கிடையாது. குறுகலான தெருக்களும், சாலை வசதியும் இல்லாததால் போக்குவரத்து வசதி இல்லாத சூழல் இருந்தது.

தஞ்சாவூர்: வந்திடுச்சு... எத்தனை ஆண்டு கால கனவு என்று தங்கள் ஊருக்குள் வந்த புதிய மினி பஸ்சை பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி உற்சாக குரல் எழுப்பி வரவேற்ற சம்பவம் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமத்தில் நடந்துள்ளது.
நகர வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மேம்பாடு என்று எத்தனை வளர்ச்சிகள் ஏற்பட்டு இருந்தாலும் நகரங்களின் முதுகெலும்பாக விளங்கும் பல்வேறு கிராமங்களுக்கு இன்னும் போக்குவரத்து வசதி என்பது எட்டாத கனியாக கிடைக்காத இனிப்பாகத்தான் உள்ளது என்றால் மிகையில்லை. குறுகிய தெருக்கள் பஸ்கள் வர இயலாது என்ற காரணத்தை காட்டி இன்னும் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இன்னும் எட்டிக்கூட பார்க்கவில்லை. கடன் பெற்று இருசக்கர வாகனம் வாகனம் வாங்கி செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லும் நிலைதான் இன்னும் இருக்கிறது.
அந்த இருசக்கர வாகனத்தில் இருவர் செல்லலாம். குடும்பமே செல்ல வேண்டும் என்றால் பஸ் போக்குவரத்துதான் தேவை. இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் பஸ் போக்குவரத்துதான் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த பஸ் சேவையை பெற பல கிலோ மீட்டர்கள் நடக்கும் நிலைதான் இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு கிராமம்தான் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பாளையக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்டது வாளரக்குறிச்சி கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவுக்கு இதுநாள் வரை நேரடி போக்குவரத்து சேவை என்பதே கிடையாது. குறுகலான தெருக்களும், சாலை வசதியும் இல்லாததால் போக்குவரத்து வசதி இல்லாத சூழல் இருந்தது. அவசர தேவைக்கு கூட இப்பகுதி மக்கள் 2 கிமீ நடந்தோ (அ) இருசக்கர வாகனத்தில் பயணித்தோ அருகிலுள்ள பாளையக்குடி சென்றே பஸ்சில் பயணிக்கும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் அரியலூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 31 நீட்டிக்கப்பட்ட புதிய மற்றும் பழைய வழித்தடங்களில் மினி பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அதிலொன்றாக அரியலூர் முதல் வாளரக்குறிச்சி வரையிலான மினி பேருந்து சேவையும் ஒன்று. இத்தகவல் இந்த கிராமத்து மக்கள் மத்தியில் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அரியலூரிலிருந்து வாளரக்குறிச்சி ஆதி திராவிடர் தெருவுக்கு முதன்முதலாக வந்த, மினி பேருந்தை அப்பகுதி பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வரவேற்று மகிழ்ந்தனர். பின்னர் தங்களது நெடுநாள் கோரிக்கை நிறைவேறிய நெகிழ்ச்சி தருணத்தில் மினி பேருந்தில் ஏறி அமர்ந்து பயணித்து மகிழ்ந்தனர். அப்போது பெண் ஒருவர் தங்கள் பகுதிக்கு முதல்முதலாக பேருந்து வசதி கிடைத்ததை எண்ணி பேருந்து முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியது காண்போரை நெகிழச் செய்தது.
அந்தளவிற்கு இந்த பகுதி மக்கள் போக்குவரத்து பஸ்சிற்காக ஏக்கத்துடன் காத்திருந்தனர் என்பது கண்கூடாக தெரிந்தது. அவசர தேவைக்கு கூட வெகு தொலைவு அலைந்து வந்தவர்களுக்கு தங்கள் பகுதிக்கே வந்ததால் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் தரப்பில் கூறுகையில், 2 கிமீ நடந்துதான் பஸ் பிடித்து செல்லும் நிலை இருந்தது. இப்போது எங்கள் பகுதிக்கே மினி பஸ் சேவை இயக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கிருந்து வேலைக்காக செல்பவர்கள் இரவு நேரத்தில் திரும்பும் போது மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இனி அந்த நிலை இருக்காது. இதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.





















