(Source: ECI | ABP NEWS)
மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த மாமியார்.. மருமகன் வெறிச்செயலால் ஊர் மக்கள் அதிர்ச்சி
மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ தடையாக மாமியார் இருப்பதாக கூறி சுருளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் பூங்கொடியை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடினார்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு மாமியார் தடையாக இருப்பதாக கூறி மருமகன் மாமியாரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கொடியரசன் மனைவி பூங்கொடியுடன் வசித்து வந்துள்ளார். இவரது மகள் நதியாவை காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த சுருளி என்பவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். கடந்த சில தினங்களாக சுருளிக்கும் அவரது மனைவி நதியாவிற்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக நதியா குள்ளப்ப கவுண்டன் பட்டியில் உள்ள அவரது தாய் தந்தையருடன் இருந்துள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டில் வசிக்கும் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்காக சொந்த ஊருக்கு மனைவியை அழைத்து வருவதற்காக குள்ளப்ப கவுண்டன்பட்டியில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சுருளி சென்றுள்ளார்.
அப்போது தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ சொந்த ஊருக்கு அழைத்தபோது மாமியார் மற்றும் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மனைவியை அவர் அழைத்த போது அவர் வருவதற்கு மறுத்ததால் அதற்கு தடையாக மாமியார் இருப்பதாக கூறி சுருளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் பூங்கொடியே சரமாரியாக குத்தி தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பலத்த காயம் அடைந்து கிடந்தவரை மீட்டி கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த கூடலூர் காவல் நிலைய காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளி சுருளி என்பவரை தேடி வருகின்றனர். மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு மாமியார் குறுக்கீடாக இருப்பதாக கூறி மருமகன் கத்தியால் மாமியாரை குத்தி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





















