Yuan Wang 5 Ship: இந்தியாவுக்கு ஆப்பு வைக்கிறதா இலங்கை..? உளவு பார்க்க வரும் சீனாவின் நவீன கப்பல்..!
இந்தியப்பெருங்கடலின் வடக்கு வட மேற்கு பகுதிகளில் ஆய்வு செய்யப்போகிறது என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன.
அரசியல், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, யார் கை கொடுத்தார்களோ, இல்லையோ, 4 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி மற்றும் பொருள் உதவி செய்து, தாம் எப்போதுமே சிறந்த நண்பன் என்பதை நிருபித்து இருக்கிறது இந்தியா. இந்தியாவிலிருந்து தமிழகம் வேறு, தமது தாய் வழி சொந்தங்களுக்காக, கப்பல்களில் நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து அனுப்பி வருகிறது.
மற்றொரு பக்கத்தில், அளவுக்கு மீறி கடனைக் கொடுத்தது மட்டும் இல்லாமல், கந்துவட்டிக்காரனை மிஞ்சும் வகையில், அசலையும் வட்டியையும் கேட்டு தொடர்ந்து இலங்கையை மிரட்டி வருகிறது சீனா என்பது அனைவரும் அறிந்த விடயம்தான்.
ஒருபக்கம் நட்புக்கு கைகொடுக்கும் இந்தியா, மறு பக்கம் கந்துவட்டிக்கார நட்பாக சீனா என்ற நிலையிலும், திருந்தாத இலங்கை அரசியல்வாதிகள் வழக்கம்போல், இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாக பெரும் விமர்சனங்கள் தற்போதே எழுந்திருக்கின்றன. இதற்குக் காணம், முழுக்க முழுக்க, சீனாவின் சாணக்கியத்தனம்தான்.
சீனாவின் அதிநவீன உளவுக்கப்பல்களில் ஒன்று, யுவான் வாங் 5. இந்தக் கப்பல், இருந்த இடத்தில் இருந்தே, தம்மைச்சுற்றியுள்ள 800 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்தையும் கடலுக்கு அடியில் இருந்து வானில் சுற்றும் செயற்கைக்கோள் வரை அனைத்தையும் உளவுப் பார்க்கக்கூடிய திறன் கொண்டது. இந்தக் கப்பல்தான், தற்போது இலங்கையின் அம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துக் கொண்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் சீனாவின் இந்த உளவுக் கப்பல், வரும் 11-ம் தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து, சுமார் ஒரு வாரம்,அதாவது 17-ம் தேதி வரை அதே இடத்தில் இருந்து ஆய்வுகள் செய்யப்போகிறதாம். இந்தியப்பெருங்கடலின் வடக்கு வட மேற்கு பகுதிகளில் ஆய்வு செய்யப்போகிறது என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. இந்தக் கப்பலில் இருந்து, கடல், தரை, வான் என மூன்று மார்க்கங்களையும் ஆய்வு என்ற பெயரில் உளவு பார்க்க இருக்கிறது சீனாவின் அதி நவீன யுவான் வாங் கப்பல்.
அம்மாந்தோட்டையில் இந்தக் கப்பல் இருந்து ஆய்வு செய்தால், தமிழகம், கேரளம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய இடங்கள் முழுவதையும் உளவு பார்க்க முடியும். குறிப்பாக, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நம் நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட முக்கியத்துவம் மிகுந்த அணு உலைகள் உள்ளிட்டவற்றை உளவு பார்த்து, அதுகுறித்து முக்கிய தகவல்களை சீன கப்பல், தமது தலைமையகத்திற்கு அனுப்பும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, செயற்கைக்கோள்களை துல்லியமாக அளவீடு செய்து, அதுகுறித்த தகவல்களையும் சேகரிக்கும் திறன் கொண்டதாம் சீனாவின் இந்த உளவு கப்பல்.
எனவே, சீனாவின் இந்த உளவு கப்பல் செய்ய இருக்கும் வேவு பார்க்கும் செயல்கள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகும் அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை சார்பில் ஏற்கெனவே வாய்மொழியாக எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் இந்தக் கப்பல் வரவில்லை என முதலில் மறுத்துவந்த இலங்கை பாதுகாப்புத் துறை, தற்போது வாய் திறக்க மறுக்கிறார்கள். இதனால், அம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் 11-ம் தேதி, சீன உளவு கப்பல் வருவது கிட்டத்தட்ட உறுதி என்று அங்குள்ள சீன நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
இதற்கு விரைவில், இந்தியதரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ எதிர்ப்பு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும் வரக்கூடும். தற்போதே, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சீன கப்பல் வருவதை, இந்தியா கடும் எதிர்ப்பை காட்டி, தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
The Chinese scientific research vessel “Yuan Wang 5”will enter Hambantota port on August 11 for a week. It is expected to leave on August 17 after replenishment. It could conduct satellite control and research tracking in the north western part of the Indian Ocean region. pic.twitter.com/lHnlsrfcjf
— Yasiru (@YRanaraja) July 23, 2022
இந்தியாவை உளவு பார்க்க மறைமுகமாக சீன முயற்சிப்பது இது முதன்முறை இல்ல. ஏற்கெனவே, கடந்த 2014-ம் ஆண்டு அதி நவீன நீர்மூழ்கி கப்பலையும் போர்க்கப்பல் ஒன்றையும் கொண்டு வந்து உளவு பார்க்க முயற்சித்தது. போதிய பலன் கிடைக்கவில்லை. அதேபோல், கடந்த டிசம்பர் மாதத்தில், திடீரென இலங்கை தூதர், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறேன் என்ற பெயரில், இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ள இலங்கைக்குச் சொந்தமான தீவுகளுக்கு வந்துச்சென்றது பெரும் சர்ச்சையானது. அந்தவகையில், தற்போது அதிநவீன உளவு கப்பலை, ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் சீனா கொண்டு வருவது, அதன் உளவு எண்ணத்தை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இலங்கைக்குக் கொடுத்த கடனைக் காரணம் காட்டி, ஏற்கெனவே, அம்மாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு, வர்த்தகம் என்ற பெயரில் சீனா வளைத்துப் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, அங்குமட்டும் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் அபகரித்துக் கொண்டுள்ளது சீனா என்றும் பெரும் விமர்சனம் இருக்கிறது.
ஏற்கெனவே, வடக்கில் லடாக்கிலும், வடகிழக்கில் அருணாசலப்பிரதேசத்திலும் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படுத்தி வரும் சீனா, தற்போது இலங்கையின் மூலம் தெற்கிலும் இந்தியாவுக்கு சிக்கல் தர முயற்சிக்கிறது என தமிழக மூத்த அரசியல்தலைவர் டாக்டர் ராமதாஸ் நேரடியாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
சீனாவின் உளவுக் கப்பல் வருகை, இந்திய- இலங்கை நட்பு உறவில் சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடாது என இலங்கை மக்களும் விரும்புகின்றனர். அண்மைக்கால நெருக்கடியின் போது, எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய உணவு என தக்க நேரத்தில் உதவி செய்த இந்தியாவுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என வெளிப்படையாகக் கூறும் இலங்கைவாசிகள், அந் நாட்டு அரசியல் தலைவர்கள், சீன கப்பலை அனுமதிக்கக்கூடாது என கூற ஆரம்பித்துள்ளனர்.
ஆராய்ச்சிக்கு வருகிறோம் எனக்கூறிக்கொண்டு, உளவு பார்க்க வரும் சீன கப்பலை அனுமதிக்கக்கூடாது என இலங்கைக்கு பெரும் அழுத்தத்தை வரும் நாட்களில், ராஜதந்திர நடவடிக்கை என்ற பெயரில் இந்தியாவும் தரக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.