விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலையில் சிக்கல்... கடலுார் அருகே மீண்டும் விரிசல்... வாகன ஓட்டிகள் அவதி
கடலுார் அடுத்த அன்னவல்லி கிராமம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கடலுார்: கடலுார் அருகே விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே பாலத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
திறக்கப்பட்ட சில நாட்களிலேயே பாலத்தில் மீண்டும் விரிசல்
விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 194 கிலோமீட்டர் துாரத்துக்கு நான்கு வழி சாலை பணி, 6,431 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இச்சாலை முழுவதும் சிமென்ட் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் 4 கட்டங்களாக நடந்த நிலையில், முதற்கட்டமான, விழுப்புரம் ஜானகிபுரத்திலிருந்து புதுச்சேரி மாநிலம், MN. குப்பம் வரை (0-29 கிலோமீட்டர்) மூன்றாம் கட்டமான 57 கிலோமீட்டர் தூரத்திற்கு பூண்டியாங்குப்பம் முதல் மயிலாடுதுறை மாவட்டம் சட்டநாதபுரம் வரை பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இரண்டாம் கட்டமான 38 கிலோமீட்டர் தூரமான, புதுச்சேரி M.N.குப்பம் முதல் கடலுார் பூண்டியாங்குப்பம் வரை பணிகள் முடிந்து மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தாலும், சிறு பணிகள் நிலுவையில் உள்ளதால் இரண்டாம் கட்ட சாலையை தற்காலிகமாக மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க முடியவில்லை.
முதல் கட்டமான 29 கிலோமீட்டர் தூரத்திற்கு கெங்கராம்பாளையத்திலும், மூன்றாம் கட்டமான 57 கிலோமீட்டர் தூரத்திற்கு கொத்தட்டையிலும் சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் முதல் மற்றும் மூன்றாம் கட்ட துாரமான 123.8 கி.மீ., துாரம் வரை மக்கள் சங்கடமின்றி எளிதாகவும், விரைவாகவும் பயணிக்க முடியும் என்பதால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நான்கு வழிச்சாலையில் உள்ள பாலத்தில் விரிசல்
இந்நிலையில், கடலுார்-விருத்தாசலம் ரோடு, அன்னவல்லியில் ரயில்வே மேம்பால பணி முடிந்து சாலை இணைப்பு பணி நடக்கிறது. இப்பகுதியில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பணி முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் கடலுார் அடுத்த அன்னவல்லி கிராமம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டு, விரிசல் ஏற்பட்ட இடத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கூத்தப்பாக்கம் அருகே நான்கு வழிச்சாலையில் விரிசல்
இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கடலுார் முதுநகர் மற்றும் கூத்தப்பாக்கம் அருகே நான்கு வழிச்சாலையில் விரிசல் ஏற்பட்டு அதை முற்றிலுமாக அகற்றி சரிசெய்தனர். கடலுார் அருகே அமைக்கப்படும் இரண்டாம் கட்ட பணிகளில் அவ்வப்போது சாலையில் விரிசல் ஏற்படுவது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிசல் ஏற்படும் பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, தீர்வு காணவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

