விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு...!
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் காவி உடையில் உண்ணாவிரதம் இருக்க வந்தவர் கைது
1.செஞ்சி கோட்டையில் கமலக்கண்ணி அம்மன் சிலை உடைப்பு
செஞ்சியில் ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகள் உள்ளன. இதில் ராஜகிரி கோட்டையின் மேல் பகுதியில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் பூசாரி ராமச்சந்திரன் பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது, அங்கிருந்த கமலக்கண்ணி அம்மன் சிலையின் கை மற்றும் கால்கள் உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் கோட்டை அலுவலகருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து பார்த்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் வந்து சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி சென்று இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த செஞ்சி பீரங்கி மேடு பகுதி மக்கள் செஞ்சி கோட்டைக்கு திரண்டு வந்து, அங்கிருந்த கோட்டை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் இது தொடர்பாக அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் செஞ்சி கோட்டை அலுவலர் நவீந்திரா ரெட்டி ஆகியோர் செஞ்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
2. மாநில அளவில் நடைபெறும் கைவினை பொருட்கள் கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு
மகளிர் சுய உதவிக்குழுக்களில் இடம்பெற்றுள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சிறப்புவாய்ந்த மற்றும் தரமுள்ள உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திட ஏதுவாக 2022-2023-ம் ஆண்டில் மதிசாராஸ் மேளா வருகிற 25.8.2022 முதல் 7.9.2022 வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. மாநில அளவில் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் சுய உதவிக் குழுக்களில் உற்பத்தி செய்யப்படும் கண்கவர் கைவினைப்பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பனை பொருட்கள், ஆடை ஆபரணங்கள், பாரம்பரிய உணவுப்பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்கள் இடம்பெறுவதோடு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியே அரங்குகள் ஒதுக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் கண்காட்சியாக நடைபெற உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மேற்கண்ட கண்காட்சியில் பங்கு பெறச்செய்யலாம். இக்கண்காட்சியில் பங்கு பெறுவதற்காக எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. முற்றிலும் இலவசமாக பங்கேற்கலாம். இதில் பங்கேற்க உள்ள சுய உதவிக்குழுக்கள் விழுப்புரம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்புகொண்டு மாநில அளவில் நடைபெறும் கண்காட்சியில் கலந்துகொள்ள ஏதுவாக பதிவு செய்துகொள்ளலாம். மேலும் தகவல் அறிந்துகொள்ள 04146-223736, 94440 94479 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
3. அரசூர் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி திடீர் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், துணை தலைவர் அனிதா, ஊராட்சி செயலாளர் மூவேந்தன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலா மற்றும் அதிகாரிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டு, கட்டப்படாமல் உள்ளது. இதனால் ஒரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. மேலும் அங்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ,பூமி பூஜை போட்டும் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது என்று கூறி, கருப்புக்கொடி ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் காவி உடையில் உண்ணாவிரதம் இருக்க வந்தவர் கைது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட அரசலாபுரம் கிராம மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரகுராமன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் கிராமத்தில் தொடர்ந்து வழிபாடுகள் மற்றும் கனிம வளக் கொள்ளையில் நடைபெறுவதாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா அன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முன்னதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றும் இடத்திற்கு அவர் காவி உடையில் வந்த ரகுராமன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். உடனடியாக பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து காரில் அழைத்து சென்றுவிட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அவர் ரகுராமன் பேசுகையில்: எங்கள் பகுதியில் நடைபெற்று வரும் தொடர் கொள்ளை வழிப்பறி கனிமவள கொள்ளை உள்ளிட்ட பல்வேறு தொல்லைகள் நடைபெறுவதால் இயற்கை வளங்கள் காக்க வேண்டி பல முறை மனுக்கள் கொடுத்து என் மீது தாக்குதல் செய்யப்பட்டன என் குடும்பத்திற்கும் எனக்கும் உயிருக்கு பாதுகாப்பில்லை பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் இன்று ஆகஸ்ட் 15 ஆம் நாள் நாடு தழுவிய அகிம்சை வழி உண்ணாவிரதப் போராட்டம் அனுமதி வேண்டி மனு கொடுத்திருந்தேன். கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினார். அதன்படி இன்று உண்ணாவிரதம் இருக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து என்னை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்துள்ளனர். எனக்கு எங்கள் கிராமம் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் தமிழகம் முழுவதும் உள்ள கனிமவள கொள்ளைகளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஒற்றை கோரிக்கை என அவர் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்