ரூ.55 ஆயிரம் மதிப்பு பேனா... முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பரிசாக பெற்ற மாணவி ராகினி நெகிழ்ச்சி பேட்டி
ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த முடித்தார். பின்னர் ‘கிளாட்’ எனப்படும் பொது சட்ட நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

தஞ்சாவூர்: பொது சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெற்ற திருச்சியை சேர்ந்த மாணவி ராகினிக்கு பொன்னாடை அணிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்து ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள தனது பேனாவையும் பரிசாக அளித்தார்.
திருச்சி பெரிய மிளகுப்பாறை பண்டாரத்தெருவைச் சேர்ந்த தயாளன் என்பவரின் மகள் ராகினி. செவித் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான ராகினு, அங்குள்ள ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த முடித்தார். பின்னர் ‘கிளாட்’ எனப்படும் பொது சட்ட நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து ராகினி மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் 2 நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் கல்லணையில் டெல்டா மாவட்டத்திற்காக சாகுபடி பணிகளுக்கு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் ரோடு ஷோவில் பங்கேற்றார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் திறந்து வைத்தார். தொடர்ந்து நேற்று காலை திருமண விழாவில் பங்கேற்றார். பின்னர் அரசு நிகழ்ச்சியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த 2 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை சென்னைக்கு செல்ல திருச்சி விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாக சென்றார்.
அப்போது திருச்சி மிளகு பாறை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் படித்து பொது சட்ட நுழைவுத்தேர்வில்(Common Law Admission Test) வெற்றி பெற்ற மாணவி ராகினியை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். மேலும் பொன்னாடை போர்த்தி, ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள தனது பேனாவை பரிசளித்து பாராட்டி, வாழ்த்து கூறினார். நன்றாக படிக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. திருச்சி சிவா, மேயர் மு.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். முதல்வரிடம் இருந்து அவரது பேனாவை பரிசாக பெற்றது குறித்து மாணவி ராகிணி கூறியதாவது:
எனது தாய் சிறுவயதிலேயே என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனது தந்தை, பாட்டி, அத்தை ஆகியோர்தான் என்னை வளர்த்தனர். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் ‘கிளாட்’ தேர்வு குறித்து அறிந்து, அந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றேன். இந்த வெற்றிக்கு எனது குடும்பத்தினர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்தான் காரணம். தேசிய சட்டப் பல்கலையில் சேர்ந்த எனக்கு முதல்வர் ஸ்டாலின், தனது பேனாவை பரிசளித்து பாராட்டியது நெகிழ்ச்சியான தருணம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மாணவி ராகினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், முதல்வர் ஸ்டாலின், அதே பகுதியில் அண்மையில் மறைந்த முன்னாள் திமுக நகரச் செயலாளர் கே.கே.எம்.தங்கராசு இல்லத்துக்குச் சென்று, அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. திருச்சி சிவா, மேயர் மு.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் விமான நிலையம் சென்ற முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.






















