தமிழக அரசியலே இதை வைத்துத்தான் நடக்கிறது- ஐக்கிய ஜனதா தள தமிழ் மாநிலத் தலைவர் மணிநந்தன்
”அகில இந்திய தலைவர் நிதீஷ் குமார் மற்றும் செயல் தலைவர் சஞ்சய்சா ஆகியோர் நெல்லைக்கு வருகை தர உள்ளனர். அவர்கள் தலைமையில் இந்த மாத இறுதியில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது”
தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமையில் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடந்தது.
இதில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் மணிநந்தன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் நிதீஷ்குமார் மற்றும் செயல் தலைவர் சஞ்சய்ஷா ஆகியோர் கலந்துகொள்ளும் நெல்லையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் தமிழ் மாநில தலைவர் மணிநந்தன் கூறும் பொழுது, தமிழகம் முழுவதும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நேரடியாக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என தெரிவித்தார்.
மத்திய பாஜக கூட்டணியில் நிதீஷ் குமார் ஆட்சி பங்கெடுத்துக் கொண்டாலும் கொள்கை ரீதியில் எந்த மாற்றமும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து பாஜகவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். சரியான பாதையில் இந்தியா கூட்டணி செல்லாமல் இருந்ததாலேயே நிதீஷ்குமார் அதிலிருந்து விலகினார். பீகாரில் நடக்கும் நிதீஷ்குமாரின் ஆட்சியை கவிழ்க்கவும், சதி நடத்தப்பட்டதால் பாஜக கூட்டணிக்கு நிதிஷ்குமார் சென்றார். இந்தியாவிலேயே முதன் முறையாக நிதீஷ்குமார் ஆட்சியில் தான் பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
பாஜக சொல்வதற்கெல்லாம் ஐக்கிய ஜனதா தளம் இணக்கமாக இருக்காது. கொள்கை ரீதியில் என்ன முரண்பாடு ஏற்பட்டாலும் குரல் கொடுக்கும் நிலையில் அவர் இருக்கிறார்.அகில இந்திய தலைவர் நிதீஷ் குமார் மற்றும் செயல் தலைவர் சஞ்சய்சா ஆகியோர் நெல்லைக்கு வருகை தர உள்ளனர்.
அவர்கள் தலைமையில் இந்த மாத இறுதியில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழக அரசு மோசமான நிலையை நோக்கி செல்கிறது. பல இலவச திட்டங்களை அரசு பொது மக்களுக்கு செய்து கொடுத்தாலும் பொருளாதார அடிப்படையில் அவர்கள் பின்தங்கி தான் இருக்கின்றனர்.
மது என்பது மக்களுக்கு எதிரான ஒன்று. மதுவும் போதை பொருள் பட்டியலில் தான் உள்ளது. தமிழகத்தின் விதவைகள் எண்ணிக்கை கூடியுள்ளது. சாதி மோதல்களை திமுக ஊக்குவிக்கிறது. தமிழகத்தில் ஜாதி மோதலை வைத்து தான் அரசியல் செய்யப்படுகிறது.
தனிதொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் திமுகவுக்கு பினாமிகளாக உள்ளனர். மாற்றுச் சாதியில் உள்ள பொருளாதாரம் அதிகம் கொண்டோர் தனி தொகுதியில் போட்டியிடும் நபர்களுக்கு அனைத்து செலவுகளையும் செய்து அவர்களை பினாமி ஆக்கி வைத்துக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் பத்திர பதிவுத்துறை தொடங்கி அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது.
அதிகாரிகளை மிரட்டி அதிகார துஷ்பிரயோகம் நடந்து வருகிறது. கணினி மாயமாக்கல் செய்யப்பட்டால் மக்கள் எளிதில் அனைத்து திட்டங்களையும் அடைந்து விடலாம் என சொல்லி கணினி மயமாமக்கள் திட்டத்தை அமல்படுத்தப்பட்ட போதிலும் ஒவ்வொரு வேலைக்கும் பணம் கொடுத்தால் மட்டுமே அந்த பணி அரசால் செய்து முடிக்கப்படுகிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன் வைத்தார்.