Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்
அம்பேத்கர் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், வரும் தேர்தலில் தலித் வாக்குகள் பறிபோய்விடுமா என்ற அச்சம் பாஜகவுக்கு எழுந்துள்ளது. மேலும் இதையே பகடுகாயாக பயன்படுத்தி தலித் வாக்குகளை வேட்டையாடும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்து மாபெரும் சர்ச்சையானது. அம்பேத்கர் அம்பேத்கர் என சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக கடவுளின் பெயரை கூறினால் சொர்க்கத்திற்கு செல்லலாம் என அவர் பேசியிருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தவரும் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவருமான சட்டமேதை அம்பேத்கர் குறித்து இழிவாக பேசியதாக அமித்ஷா மீது நாடு முழுவதும் கடும் அதிருப்தி அலை உருவாகியுள்ளது.
இது பாஜகவினருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஆட்சியை தீர்மானிக்கும்
தலித் வாக்குகள் தற்போது கைவிட்டு போய்விடுமா என்ற அச்சம் பாஜகவினருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதையே ப்ளஸாக கருதி தலித் வாக்குகளை வேட்டையாடும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளது.
எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் புகைப்படத்துடன் அமலியில் ஈடுபடுவது, கோஷம் எழுப்புவது, தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது பிரியங்கா காந்தி அம்பேத்கர், அம்பேத்கர் என முழக்கமிட்டது, ராகுல் காந்தி நீல நிற டி சர்ட் அணிந்து நாடாளுமன்றம் வந்தது ஓர் அரசியல் சரித்திர நிகழ்வாகவே மாற்றிவிட்டனர்.
மேலும் இன்னும் சில மாதங்களில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தலித் வாக்குகளை தன்பக்கம் ஈர்க்க முற்பட்டுள்ளார் கெஜ்ரிவால். பாஜக ஆட்சியையே தீர்மானித்த கூட்டணி தலைவர்களான சந்திர பாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாருக்கு கெஜ்ரிவால் அம்பேத்கர் விவகாரம் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்தாலும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு துணை நின்றால் தலித் வாக்குகள் தங்களுக்கும் பறிபோய்விடுமோ என்ற அச்சம் நிச்சயம் இவர்களுக்கும் உருவாகும். ஆக பாஜக பக்கம் நிற்க தயக்கம் காட்டும் நிலையிலேயே கூட்டணிகள் உள்ளன. இது பாஜகவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
இதனால் இந்த விவகாரத்தை அணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அமித்ஷா, அம்பேத்கர் குறித்து தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், எதிர்க்கட்சியினர் அதை திரித்து பேசுவதாகவும், அம்பேத்கர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் விளக்கமளித்தார்.
எனினும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்த்தால் தீவிர அரசியல் பிரச்சனையாக தற்போது உருமாறியுள்ளது. ஆட்சியையே தீர்மானிக்கும் பவர் தலித் வாக்குகளுக்கு உள்ளதால் தற்போது ஒட்டுமொத்த தலித் வாக்குகளையும் தங்கள் பக்கம் திருப்பி ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகரகள் தெரிவிக்கின்றனர்.