"விவசாய முறையே மாற்றி அமைக்கப்படும்" பதஞ்சலி உணவு பூங்கா குறித்து ஆச்சார்யா பாலகிருஷ்ணா கருத்து!
நாக்பூரில் தொடங்கப்பட உள்ள உணவு பூங்காவால் நாட்டின் விவசாய முறை மாற்றி அமைக்கப்படும் என பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள மிஹான் (நாக்பூரில் உள்ள மல்டி-மாடல் சர்வதேச சரக்கு மையம் மற்றும் விமான நிலையம்) பகுதியில் பதஞ்சலியின் 'மெகா உணவு மற்றும் மூலிகை பூங்கா' தொடங்கப்பட உள்ளது. நாளை மறுநாள் முதல் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். இதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 2016ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
பதஞ்சலி உணவு பூங்கா:
இந்த நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த திட்டம் நாட்டின் விவசாய முறையை மாற்றி அமைக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கணிசமாக மேம்படுத்தும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் பதஞ்சலி நிறுவனத்தில் தீவிரமாக இணைந்து வருகின்றனர். இந்தப் பகுதி விவசாயிகள் பல வருடங்களாகக் காத்திருந்த நாள் வந்துவிட்டது. விதர்பா என்றதும் விவசாயிகளின் துயரங்களும் அவர்கள் செய்த தற்கொலைகளும் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இந்த நிலை விரைவில் மாறும்.
பதஞ்சலி ஆலைக்கு அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படும். இந்த முழு பிராந்தியத்திலும் விவசாயிகளின் மோசமான நிலையையும் விவசாய முறையையும் மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும். இன்று, இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயியும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.
ஆச்சார்யா பாலகிருஷ்ணா என்ன சொன்னார்?
மேலும், சில திறமையான நபர்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும், உள்ளூர் விவசாயிகளை வளப்படுத்துவதும் எங்களுக்கு முன்னுரிமை. பதஞ்சலியின் ஆலையை நிறுவுவதற்கு கணிசமான நேரமும் முயற்சியும் தேவைப்பட்டது.
ஏனெனில், கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இந்தத் திட்டம் மிகவும் தாமதமானது. பிரதமர் நரேந்திர மோடியின் திறன் பயிற்சித் திட்டங்கள் என்ற கனவை நனவாக்குவதில் பதஞ்சலி பெரும் பங்காற்றியது. இதன் மூலம் நாட்டில் மனிதவளத் திறன்கள் வளர்க்கப்படுகிறது" என்றார்.
பதஞ்சலியின் இந்த ஆலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதன் பணிகள் விரிவடையும் போது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். விரைவில் இந்த ஆலையில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.





















