DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
DMK Meeting: திமுக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட யுள்ளது.
திமுக செயற்குழு கூட்டம்:
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “ திமுக தலைமை செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று திமுகவின் செயற்குழு கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக திமுக செயற்குழு கூட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய அம்சங்கள் என்ன?
கூட்டத்தில், 2026ம் ஆண்டு தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முழக்கத்தை, சாத்தியமாக்குவது எப்படி, அதற்காக மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, நிர்வாகிகள் தேர்தலுக்கு தயாராவது குறித்தும் கட்சி தலைமை அறிவுரைகளை வழங்கக் கூடும். அதோடு, வரும் ஜனவரி 5ம் தேதியுடன் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. ஆனால், வார்ட் மறுவரையறை உள்ளிட்ட பணிகள் முடிவடையும் வரை, உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு வாக்குறுதி அளித்துள்ளது. இது திமுகவிற்கு தேர்தல் களத்தில் எத்தகையை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயை சமாளிக்க வியூகம்?
2026ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டி என நாம் தமிழர் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதிமுக உடன் கூட்டணி இல்லை தனித்தே போட்டியிடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அறிவித்துள்ளார். அதிமுக மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் களத்திற்கு தயாரகி வருகின்றன. இதனால், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பல்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விஜய் மற்றும் உதயநிதி என்ற கோணத்திலேயே இந்த தேர்தல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால், விஜயை அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் எதிர்கொள்வது எப்படி? தவெகவிற்கு எதிரான அரசியலை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் திமுக செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.