21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
நவம்பர் 25ம் தேதி நாடாளுமன்றம் ஆரம்பித்ததில் இருந்தே தினமும் விதவிதமான போராட்டத்தில் இறங்கி நாடாளுமன்றத்தை அலறவிட்டனர் எதிர்க்கட்சிகள். குறிப்பாக அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என சொல்லி முதல் நாள் முதலே நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒன்று கூடி கோஷங்களை எழுப்பினர். இதுமட்டுமல்லாமல் மணிப்பூர் விவகாரம், உத்தரபிரதேசம் சம்பல் பகுதி வன்முறை உள்ளிட்ட விஷயங்களில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட்டம் நடத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பிரதமர் மோடி, அதானி போல் மாஸ்க் அணிந்து உரையாடியது, தேசிய கொடியை வைத்து போராட்டம் நடத்தி அதையே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ராகுல்காந்தி கொடுக்க முயன்றது என ஒவ்வொரு போராட்டமும் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிதாக ஹேண்ட் பேக் பாலிடிக்ஸ்-ம் வந்தது. பாலஸ்தீனம் மற்றும் பங்களாதேஷ் சிறுபான்மையினருக்கு ஆதரவாக எம்.பி பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்திற்கே பேக் அணிந்து வந்தார். இதற்கு பதிலடியாக பாஜக தரப்பில் இருந்து சீக்கியர் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் 1984 என்ற ஆண்டு பொறித்த ஹேண்ட் பேக்கை பிரியங்கா காந்தியிடம் கொடுத்தனர். இப்படி டிசம்பர் 20 வரை நாடாளுமன்றத்தில் தினமும் ஒரு போராட்டம் என அமைதியாக நடந்து வந்தது.
இறுதியாக அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பற்றி பேசியது நாடாளுமன்றத்தையே கலவரமாக மாற்றியது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் நீல நிற உடையும் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். மற்றொரு பக்கம் பாஜகவினரும் போராட்டத்தில் குதித்ததால் 2 தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பிக்கள் காயமடைந்ததாக ராகுல்காந்தி மீது பாஜகவினர் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். ஒரு பக்கம் நாடாளுமன்றத்தை முறையாக நடத்தவிடவில்லை என இந்தியா கூட்டணியினர் மீது பாஜகவினர் குறை சொன்னாலும், பல்வேறு பிரச்னைகளை பேசாமல் பாஜக நழுவ வாய்ப்பு கொடுக்காமல் எதிர்க்கட்சியினர் சேர்ந்து குரல் கொடுத்து அவர்களுக்கு பயத்தை கொடுத்திருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.