இந்தி பெல்ட் மாநிலங்களில் ஒற்றை மொழி மட்டுமே பேசும் 90% மக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள 90 சதவீதம் மக்கள் ஒற்றை மொழியை மட்டுமே பேசுவதாகவும் மீதமுள்ள இந்திய மாநிலங்கள் இரட்டை மொழியை பேசுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள 90 சதவீதம் மக்கள் ஒற்றை மொழியை மட்டுமே பேசுவதாகவும் மீதமுள்ள இந்திய மாநிலங்கள் இரட்டை மொழியை பேசுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1991 மற்றும் 2011 மொழி கணக்கெடுப்பில் இதுகுறித்த விவரம் வெளியாகியுள்ளது. குறிப்பாக 1991-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 84.5 சதவீதம் தமிழ் மட்டுமே பேசுவோரின் சதவீதம் 84.5 ஆக இருந்தது. இது 2011ஆம் ஆண்டில் 78 சதவீதமாகக் குறைந்தது. அதேபோல, ஒடிசாவில் ஒடிய மொழி மட்டுமே பேசும் நபர்களின் எண்ணிக்கை 86 சதவீதத்தில் இருந்து 74.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஒற்றை மொழி பேசுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
அதே நேரத்தில் இந்தியை பிரதான முதல் மொழியாகக் கொண்டுள்ள மாநிலங்களில் ஒற்றை மொழி பேசுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. சில இடங்களில் அதிகரிக்கவும் செய்திருக்கிறது. குறிப்பாக பிரிக்கப்படாத பிஹாரில், இந்தி மொழி பேசுவோரின் எண்ணிக்கை 1991-ல் 90.2 சதவீதமாக இருந்தது. இது 2011-ல் 95.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலத்தை முதன்மை மொழியாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில், ஆங்கிலமும் பேசும் தாய்மொழி தமிழ் பேசுபவர்களின் விகிதம் 1991 இல் 13.5% ஆக இருந்தது, இது 2011 இல் 18.5% ஆக உயர்ந்தது. இதற்கு நேர்மாறாக, ஹரியானாவில், இந்தி பேசுபவர்களின் ஆங்கிலமும் பேசும், விகிதம் அதே காலகட்டத்தில் 17.5%-ல் இருந்து 14.6% ஆகக் குறைந்துள்ளது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்தியை இரண்டாவது மொழியாக ஏற்றுக்கொள்வது அதிகமாகக் காணப்படுகிறது, அங்கு கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் இந்திமொழியை இரண்டாவதாகக் கற்கத் தேர்வு செய்துள்ளனர். குஜராத்தில், இந்தி பேசும் குஜராத்தி மொழி பேசுபவர்களின் விகிதம் 1991 இல் 21.6% ஆக இருந்தது, இது 2011 இல் 39% ஆக அதிகரித்தது.
இணைப்பு மொழியாக ஆங்கிலம்
மாநிலங்கள் முழுவதும் மனிதவள மேம்பாட்டு குறியீட்டு (HDI) மதிப்பெண்களை ஒப்பிடுவது, ஆங்கிலப் புலமைக்கும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கும் இடையே நேர்மறையான தொடர்பைக் குறிக்கிறது. ஆங்கிலம் பேசுபவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள் சிறந்த வளர்ச்சி அம்சங்களைக் கொண்டுள்ளன.
அதேசமயம் இந்தி பேசுபவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள் பொதுவாக குறைந்த மனிதவள மேம்பாட்டு மதிப்பெண்களையே காட்டுகின்றன.
என்ன காரணம்?
பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து பிரதமருக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகள், இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள், சிறந்த பொருளாதார வாய்ப்புகளைத் தேடி இந்தி பேசாத பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருவதாகத் தெரிவித்து உள்ளன. இது, இந்தியை விட ஆங்கிலம் மிகவும் பயனுள்ளதாக மக்களிடையே இருப்பதை வெளிப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.






















