Independence Day 2024: மவுத்தார்கன் வாசித்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய காந்திமதி யானை - பக்தர்கள் ஆச்சரியம்
நெல்லையப்பர் கோவிலில் விக்டோரியா மகாராணியால் வழங்கப்பட்ட தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றப்பட்டது, முன்னதாக யானை காந்திமதி மவுத்தார்கன் வாசித்தது பக்தர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரபல கோவில்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்வு இன்றளவும் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஐந்து சிவசபைகளில் திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோவில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பாகும்.
இந்த நிலையில் நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி அவர்களால் வழங்கப்பட்ட தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக யானை காந்திமதி மவுத்தார்கன் வாசித்தது பக்தர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
View this post on Instagram
அப்போது தேசிய கொடியை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், கோவில் யானை காந்திமதி முன் செல்ல ஊர்வலமாக கோவில் ஊழியர்களால் தேசியக்கொடி எடுத்து வரப்பட்டு தொடர்ந்து கொடி கம்பம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசியக்கொடியை கோயில் செயல் அலுவலர் ஏற்றி மரியாதை செய்தார். அப்போது கோவில் யானை காந்திமதி மூன்று முறை தும்பிக்கையை உயர்த்தி, பிளிறி தேசிய கொடிக்கு மரியாதை செய்தது. அதனை தொடர்ந்து கோவில் ஊழியர்களும், தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். தொடர்ந்து தேசிய கொடிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகளும், விபூதி பிரதாசமும் வழங்கப்பட்டது.
அதே போல நெல்லை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மேயர் ராமகிருஷ்ணன் மூவர்ண கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழகள் வழங்கப்பட்டது. அதேபோல நெல்லையப்பர் கோவில் திருத்தேரோட்டத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, துணைமேயர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தொடர்ந்து தேசியக்கொடிக்கு மகா தீபாராதனை நடைபெற்று சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.