டெல்லியின் அடுத்த முதல்வர் ரேகா குப்தா.. பாஜகவின் அதே ஃபார்முலா.. ஓகே சொன்ன மோடி!
டெல்லியில் முதல்முறை எம்எல்ஏ-வான ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியுள்ளது பாஜக மேலிடம். இன்று நடந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான ரேகா குப்தாவுக்கு பாஜக மேலிடம் முதலமைச்சர் பதவி வழங்கியுள்ளது. பிரபலம் இல்லாத ஒருவரை தேர்வு செய்து, அவர்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ள பாஜக, அதே ஃபார்முலாவை இம்முறையும் பின்பற்றியுள்ளது.
பாஜகவின் அதே ஃபார்முலா:
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ள பாஜக, முதலமைச்சர் யார் என்பதை அறிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களை தங்கள் வசம் கொண்டு வந்த போதிலும் தேசிய தலைநகரான டெல்லி, பாஜகவுக்கு ஒரு கனவாகவே இருந்தது.
ஆனால், இந்த மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி பெரும் வெற்றியை பதிவு செய்தது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல், இடையில் ஓராண்டை தவிர்த்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி.
ஊழல், வளர்ச்சி பணிகளில் தொய்வு, எந்த முன்னேற்றமும் இல்லை என பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பாஜக பிரச்சாரம் செய்தது. அதன் விளைவாக, தேர்தலில் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்தனர்.
யார் இந்த ரேகா குப்தா?
இறுதியில், 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேலான நிலையிலும் முதலமைச்சர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது.
அதில், முதலமைச்சராக முதல்முறை எம்எல்ஏ-வான ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். புது டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து வெற்றி கொடி நாட்டிய பர்வேஷ் வர்மா, துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரான ரேகா குப்தா, டெல்லியின் நான்காவது பெண் முதல்வர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வயதான இவர், நாளை நண்பகல் டெல்லின் புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்டமான பதவியேற்பு விழாவில் பதவியேற்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

