Article 370 முதல் அயோத்தி வரை.. அமித்ஷாவின் RIGHT HAND ! யார் இந்த ஞானேஷ் குமார் ?
அமித்ஷாவின் ரைட் ஹேண்ட்..மோடியின் ஃபேவரைட்.. என்றெல்லாம் அறியப்படும் புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து முதல் அயோத்தி ராமர் கோவில் வரை, பாஜகவுக்கு பேக்போனாக இருந்தது மட்டுமல்லாமல் தனது இளமைக் காலத்தில் இருந்தே பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தி இன்று இந்த உயரத்தை எட்டியுள்ளார் என்றால் மிகையல்ல!
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே பிரதமர் மோடியின் ஃபுல் சப்போர்ட்டுடன் அடுத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்றுள்ளார் ஞானேஷ் குமார்.
அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராக ஓய்வு பெற்ற ஞானேஷ் குமார், அடுத்த 11 மாதத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இந்த ஃபாஸ்ட் ப்ரோமோஷனின் பின்னணியும் ஞானேஷ் கடந்து வந்த பாதையையும் காணலாம்.
ஞானேஷ் குமார் ஜனவரி 27, 1964 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் சுபோத் குமார் குப்தா சத்யவதி குப்தா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை சுபோத் குமார் குப்தா ஒரு மருத்துவர். தலைமை மருத்துவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். கோரக்பூர், லக்னோ, கான்பூர் பகுதிகளில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ஞானேஷ், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் உத்தர பிரதேச மாநில அளவில் ரேங்க் ஹோல்டராக திகழ்ந்தார்.
பின்னர் ஐஐடி கான்பூரில் பி.டெக் சிவில் இஞ்சினியரிங் முடித்தார். (ICFAI) எனப்படும் இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் இன்ஸ்டிடியூஷனில் Business Finance உம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மருத்துவ குடும்பத்தில் பிறந்த இவர், தனக்கென தனிப்பாதையை தேர்ந்தெடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக கடுமையாக பயிற்சி செய்து அதில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 1988ல் கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக ஆக பணியமர்த்தப்பட்டார் ஞானேஷ். கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தின் assistant கலெக்டராகவும், அடூர் சப் கலெக்டராகவும் பணிபுரிந்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியில் இருந்த 2007 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றினார். 2014 ஆம் ஆண்டு, புதுதில்லியில் கேரள அரசால் குடியுரிமை ஆணையராக நியமிக்கப்பட்டார். ஐ.எஸ்.ஐ.எஸ் நெருக்கடியின் போது ஈராக்கில் தாக்கப்பட்ட 183 இந்தியர்களை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் ஞானேஷ். மேலும் அரசு நிர்வாக ரீதியில் பல தலைமை பொறுப்புகளை வகுத்துள்ளார் ஞானேஷ் குமார்.
குறிப்பாக மத்திய கூட்டுறவு அமைச்சகத்தில் இவர் இணைச் செயலாளராக காஷ்மீர் பிரிவில் பணியாற்றிய போது மத்திய பாஜக அரசால் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட ஆர்டிகல் 370 ரத்து [ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து] மசோதாவில் இவரது பங்கு இன்றியமையாதது.
பின்னர் 2020 ஆம் ஆண்டு அமித்ஷாவின் கூட்டுறவு அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஞானேஷ், அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான சட்ட சிக்கல்களை தகர்த்தெறிந்து, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைக்க முக்கிய காரணமாக விளங்கி கோவில் கட்ட வழிவகுத்தார்.
அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு ஜனவரியில் ஓய்வுபெற்றார். பின்னர் இரண்டே மாதங்களில் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.ராஜிவ் குமார், சுக்பீர் சிங் சந்து உட்பட மூன்று பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றார்.
இந்நிலையில் ராஜிவ் குமார் பணி ஓய்வு பெற்ற நிலையில், சீனியாரிட்டி அடிப்படையில் ஞானேஷ் குமார் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமணம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய விதிகளின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைமை தேர்தல் ஆணையராகவும் விளங்குகிறார் ஞானேஷ்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரைப்படி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பெரும்பான்மை அடிப்படையில் அவரே தலைமை தேர்தல் ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழுவே தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 61 வயதான ஞானேஷ் குமார் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார். 2025 பீகார் சட்டமன்றத் தேர்தல்.2026 தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தல் 2027 குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்,2029 மக்களைவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் என இவரது பதவிக்காலத்தில் பல முக்கிய தேர்தல்கள் நடைபெற உள்ளது.
2029 ஆம் ஆண்டும் ஜனவரி 26 வரை ஞானேஷ் குமார் பதவியில் இருப்பார்.
மேலும் இவரது மகள் மேதா ரூபம் உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.ஞானேஷ் குமாரின் மருமகன் மணீஷ் பன்சாலும் ஐஏஎஸ் அதிகாரி. ஞானேஷ் குமாரின் இரண்டாவது மகள் அபிஷ்ரி ஐஆர்எஸ் அதிகாரியாகவும், அவரது கணவர் அக்ஷய் லாபரூ ஐஏஎஸ் அதிகாரியாகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















