இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை உடன் கைவிட வேண்டும்: வலியுறுத்துவது யார் தெரியுங்களா?
மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.6,200 கோடி லாபம் ஈட்டி வழங்கிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பலப்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்: மத்திய அரசு முன்மொழிய உத்தேசித்துள்ள இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை உடன் கைவிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி முன்னாள் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு முன்மொழிய உத்தேசித்துள்ள இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும் என தஞ்சாவூரில் நடந்த பாரத ஸ்டேட் வங்கி முன்னாள் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் தொழிற்சங்க தலைவர்கள் பொதுக்குழு
பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பின் 8-வது பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி. ராமன் தலைமை வகித்தார். செயலாளர் எம்.கே. மூர்த்தி, துணைத்தலைவர் டி.வி.சந்திரசேகரன், துணைச் செயலாளர் எம்.முருகையன், முன்னாள் பொதுச் செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு வருகை தந்த அனைவரையும் நிர்வாக குழு உறுப்பினர் எம்.ரகுநாதன் வரவேற்றார். வேலூர் ஆர்.லோகநாதன் நன்றி கூறினார்.
கம்யூட்டேஷன் தொகையை 10 ஆண்டுக்கு பிடித்தம் செய்யணும்
கூட்டத்தில் 15 ஆண்டுகள் பிடித்தம் செய்யும் நடைமுறையில், ஒவ்வொரு ஓய்வூதியரிடமிருந்தும் ரூ.8 லட்சத்து 27 ஆயிரம் கூடுதலாக பிடித்தம் செய்வது மிகவும் தவறான செயலாக இருக்கும். பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர்கள் ஓய்வு பெறும்போது பெறும் கம்யூட்டேஷன் தொகையை 10 ஆண்டுகளுக்கு மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும்.
பாரத ஸ்டேட் வங்கி 10 வருடங்களுக்கு மட்டுமே பிடித்தம் செய்யும் நடைமுறையை தாமதம் இன்றி உடனே நடைமுறைப்படுத்துவதோடு, கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை 8.5 சதவீத வட்டியுடன் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.
ஓய்வூதிய சீரமைப்பு பெறாமல் சுமார் 1.50 லட்சம் ஓய்வூதியர்கள் கடந்த 30 வருடங்களில் மரணம் அடைந்துள்ளனர். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கும், மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நபார்டு வங்கி ஆகியவற்றின் ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்படுவது போல ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எல்லா தருணங்களிலும் 7 லட்சம் வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை சீரமைத்து, உயர்த்தி தாமதம் இன்றி தர மத்திய அரசு முன்வர வேண்டும்.
வங்கி ஓய்வூதியர் பென்ஷன் சீரமைப்பு குறித்த சட்டம்
1995 -ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வங்கி ஓய்வூதியர் பென்ஷன் சீரமைப்பு குறித்த சட்டத்தை தாமதம் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 2009 -ம் ஆண்டு இன்சுரன்ஸ் துறையில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க டாக்டர் ஏ.கே. கண்டேல்வால் கமிட்டியை மத்திய அரசு அமைத்தது.
அந்த கமிட்டி வங்கி ஓய்வூதியர்களின் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரிமியத்தை பொதுத்துறை வங்கி நிர்வாகங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சிக்காகவும், வாழ்நாள் முழுமையும் உழைத்த ஏழு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.
எல்ஐசியை பலப்படுத்த வேண்டும்
மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.6,200 கோடி லாபம் ஈட்டி வழங்கிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் தனியார் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு முன்மொழிய உத்தேசித்துள்ள மசோதாவை நாட்டு மக்களின் நலனுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் எதிரானது என்பதை உணர்ந்து தாமதம் இன்றி கைவிட முன்வர வேண்டும். அண்மையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சைக்கு வழிவகை செய்யும். இந்தத் திட்டத்தை 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உதவி பொருளாளர் பி.பூமிநாதன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திருவாரூர் என்.பாண்டுரங்கன், கோவை எம்.ரகுநாதன், புதுச்சேரி எஸ்.கருணாகரன், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.