Thirumavalavan : ”ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?” உண்மையை உடைத்தார் திருமாவளவன்..!
”விஜய் அவர்களோடு மேடையேறும் துணிச்சல் திருமாவளவனுக்கு இல்லையா? அது அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டுவிழா தானே; அதனை அவர் புறக்கணிக்கலாமா?”
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் லாட்டரி மார்ட்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் அந்த கட்சித் தலைவர் திருமாவளவன் இருப்பதாகவும் அவர் சொல்வதையே திருமாவளவன் கேட்பதாகவும் சமீப காலமாக நிலவி வந்த கருத்துக்கு மனம் திறந்து பதிலளித்திருக்கிறார் அவர்.
விஜயோடு பங்கேற்காதது ஏன் ?
இன்று சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், விஜயோடு பங்கேற்காதது ஏன் என்பது குறித்து நீண்ட, நெடிய விளக்கத்துடன் அறிக்கை கொடுத்திருக்கும் திருமாவளவன், அதில் ஆதவ் அர்ஜூனா குறித்தும் பேசியிருக்கிறார். அதில், விஜயும் தானும் பங்கேற்கவிருப்பதாக பேசியிருப்பது வெளியில் யாருக்கும் தெரியாத நிலையில், ஒரு நாளேடு அரசியல் நோக்கத்தோடு இதனை பெரிதுப்படுத்தி வெளியிட்டது என்றும் அதன்பிறகே புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அரசியல் சாயம் பூச முயற்சிக்கப்பட்டது எனவும் அந்த அறிக்கையில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
#BREAKING | திருமாவளவன் பரபரப்பு கருத்து
— Raja Shanmugasundaram (@SRajaJourno) December 6, 2024
என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னரும் விஜயோடு எப்படி ஒன்றாக மேடையேற முடியும்..?
கொள்கை பகைவர்களின் சூது- சூழ்ச்சிக்குப் பலியாகி, அவர்களின் நோக்கம்… pic.twitter.com/npP9dKF1Mq
விசிக – திமுக இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி
மேலும், திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் அய்யத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும் தான் அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ள திருமா, மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே! என்றும் எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே எனவும் கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், விஜயோடு தான் பங்கேற்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு மட்டும் இவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவது ஏன் என்று கேட்டுள்ளார்.
விஜய்க்கு கூட்டணியில்லை ; விசிக கூட்டணியில் இருக்கிறது - திருமா
மேலும், விசிக ஏற்கனவே ஒரு கூட்டணியைத் தோழமை கட்சிகளோடு இணைந்து உருவாக்கியிருக்கிறது என்றும் விஜய் இனிமேல்தான் கூட்டணியை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட திருமா, திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதையும் அதன்மூலம் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுப்பதையும் தனது முதன்மையான கடமைகளாகவும் கொண்டு செயலாற்றி வருகிறது என தெரிவித்துள்ளார்.
திருமாவுக்கு துணிச்சல் இல்லையா ?
அதே நேரத்தில், விஜய் அவர்களோடு மேடையேறும் துணிச்சல் திருமாவளவனுக்கு இல்லையா? அது அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டுவிழா தானே; அதனை அவர் புறக்கணிக்கலாமா? திரையுலகின் சாதனையாளராகப் புகழ்பெற்ற கவர்ச்சிமிகு கதாநாயகர் விஜய் அவர்களோடு மேடை ஏறுவதற்கு கிடைத்த ஒரு அளப்பரிய வாய்ப்பை அவர் நழுவ விடலாமா?அப்படியே ஒருவேளை அவரோடு கூட்டணி அமைத்தால்தான் என்ன தவறு ? திருமாவுக்கு காலச் சூழலுக்கேற்ப அரசியல் செய்யத் தெரியவில்லையா? வராதுபோல் வந்த மாமணி போல் ஒரு வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்குச் சூழலைக் கையாளத் தெரியாமல் அவர் தடுமாறுகிறாரா? திமுக அவரை அச்சுறுத்துகிறதா? அந்த அச்சுறுத்தலுக்கு அவர் பணிந்து விட்டாரா? திமுக கூட்டணியை விட்டு வெளியேற அவரை எது தடுக்கிறது? இவ்வாறு சிலர் தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் பல்வேறு ஊகங்களை ஊடகங்களில் அள்ளி இறைத்து நம்மை வறுத்தெடுக்கிறார்கள் என்றும் வேதனைப்பட்டுள்ள திருமாவளவன், இவர்களில் பெரும்பாலோர், திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பவர்கள் என்று அவர்களை வசைப்பாடியுள்ளார்.
ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறேனா ? திருமாவளவன் சொன்ன பதில்
மேலும், "ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறார் திருமா; அதனால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார் " என்று சொல்லுகிற அதே நபர்கள் தாம்,"திமுகவுக்கு அஞ்சுகிறார் அதனால்தான் இந்த நிகழ்வில் பங்கேற்காமல் திருமா தவிர்த்து விட்டார் " என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகின்றனர். ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் திருமா இருப்பது உண்மையெனில், அவர் அழைத்தும்கூட ஏன் திருமா இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? அதேபோல, திமுக அவரை அச்சுறுத்துவது உண்மையாக இருந்தால், அதற்குப் பணிந்து ஆதவ் அர்ஜூனா மீது அவர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? என்று அடுக்கடுக்கான கேள்விகளை ஆதங்கமாக எழுப்பியுள்ள திருமாவளவன், ‘திருமாவை யாரும் அப்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியாது; அவர் சுதந்திரமாகவும் துணிவாகவும் முடிவெடுக்க கூடியவர்’ என்றெல்லாம் யாரும் இங்கே நமக்காக வாதாட மாட்டார்கள் என்று அந்த நீண்ட நெடிய அறிக்கையில் திருமா ஆதங்கப்பட்டிருக்கிறார்.