DMK Minister | ஊர் மக்களின் பல நாள் கனவு நிறைவேறிய சரிகமப தர்ஷினி ஆக்ஷனில் இறங்கிய திமுக | Dharshini
ஜீ தமிழ் சரிகமபா நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமி தர்ஷினி அந்நிகழ்ச்சி வாயிலாக தங்கள் ஊருக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித்தர கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து சிறுமியின் கோரிக்கையை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தில் சுமார் 1000க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கிராம மக்கள் பேருந்து வசதி கேட்டு துறைச் சார்ந்த அதிகாரிகளிடமும் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கிரமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் தர்ஷினி என்பவர் கடந்த வருடம் முன்பாக அப்பா பாடல் பாடி பிரபலமானார். இந்தப் பாட்டைக் கேட்டு டி.இமான் தொலைபேசியில் மூலம் தொடர்பு கொண்டு தர்ஷனிடம் பேசினார்.
இந்தநிலையில், இவர் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி (ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப) பாட்டு போட்டியில் கலந்து கொண்டு பாடலை பாடி அனைவரையும் கவர்ந்தார். அப்போது பள்ளிக்கு சென்று படிப்பதற்கு அம்மணம்பாக்கம் - அனந்தமங்கலம் வரையிலான போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருமாறு அந்நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார் தர்ஷினி.
இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சிறுமியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அம்மணம்பாக்கம் - அனந்தமங்கலம் வரையிலான இலவச பேருந்து போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தரும்படி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை அம்மணம்பாக்கம் - அனந்தமங்கலம் வரையிலான இலவச பேருந்தை சிறுமி தர்ஷினியை முன்னிறுத்தி தொடங்கி வைத்தார். மேலும் 5 கிலோமீட்டர் அதே பேருந்தில் அமைச்சர் சிவசங்கரும் பயணம் செய்து பள்ளி மாணவ மாணவர்களை பள்ளியில் இறக்கி விட்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.