Chennai: "ஒரு வருஷத்துக்கு கவலை வேண்டாம்" சென்னைக்கு வராது தண்ணீர் பஞ்சம் - அடித்துச் சொல்லும் அதிகாரிகள்
Chennai Water: சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக அடுத்த ஒரு வருடத்திற்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தலைநகராக சென்னை திகழ்கிறது. தமிழ்நாட்டில் அதிக மக்கள் வாழும் நகரமாக சென்னை திகழ்கிறது, சுமார் 1 கோடி மக்கள் வாழும் சென்னையில் பல ஆண்டுகளாக முக்கிய பிரச்சினையாக இருப்பதற்கு அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் ஓரளவு தீர்வு கண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னையில் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் சென்னை தப்பித்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் நடப்பாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகளவு மழைப்பொழிவு தொடக்கம் முதலே இருந்தது. தென்மேற்கு பருவமழையே நன்றாக பெய்த நிலையில், வடகிழக்கு பருவமழையும் நன்றாக கொட்டித் தீர்த்து வருகிறது.
வடகிழக்குப் பருவமழை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஃபெஞ்சல் புயல் காரணமாகவும் சென்னையில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
பூண்டி ஏரி:
பூண்டி ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 1810 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மில்லியன் கன அடி ஆகும். இதனால், அடுத்து வரும் நாட்களில் பெய்யும் மழைநீரும் பூண்டி ஏரியில் சேமிப்பாக அமையும். தற்போது வரை விநாடிக்கு 4 ஆயிரத்து 360 கன அடி நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
சோழவரம் ஏரி:
சென்னைக்கு மற்றொரு முக்கிய நீர் ஆதாரமான சோழவரம் ஏரியில் தற்போது கைவசம் 198 மில்லியன் கன அடிநீர் உள்ளது. சோழவரம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து 166 கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியின் முழு கொள்ளவதா 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில் தற்போது 2 ஆயிரத்து 786 கன அடி உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து விநாடிக்கு 209 கன அடி அனுப்பப்படுகிறது.
கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரி:
500 மில்லியன் கன அடி இருப்பைக் கொண்டது கண்ணன் கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரி. இந்த ஏரியில் தற்போது 325 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. தற்போது வரை நீர்வரத்து விநாடிக்கு 15 கன அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு தற்போது தண்ணீர் இருப்பு 2 ஆயிரத்து 845 மில்லியன் கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு தற்போத 751 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 3 ஆயிரத்து 65 கன அடியாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தற்போது விநாடிக்கு 123 கன அடி நீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
மேலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல ஏரிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வரை அந்த நீர்நிலைகளில் 9 ஆயிரத்து 747 மில்லியன் கன அடி உள்ளது. இதுமட்டுமின்றி, சென்னையில் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து தப்பிக்கவும், மழை காலங்களில் தண்ணீரை சேமிக்கவும் மாநகராட்சி சார்பில் 41 குளங்கள் உருவாக்கும் பணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மட்டும் 3 குளங்கள் வெட்டப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே, தலைநகர் சென்னையில் அடுத்த 1 வருடத்திற்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.