அம்பேத்கர் பற்றி பெரியார் சொன்ன வார்த்தை : நினைவு தினத்தில் பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்
நமது லட்சிய வழியில் ஒரு சில இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஏதோ ஒரு சம்பவம் நடந்தால் இதுதான் பெரியார் மண்ணா என கேள்வி எழுப்புகின்றனர்
ஜாதி, மதத்தை வைத்து பிளவு படுத்தும் நோக்கம் நான் இருக்கும் வரை நடக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “அம்பேத்கருக்கு நிகரான தலைவர் இல்லை. எனக்கு தலைவராக இருக்க கூடிய தகுதி படைத்தவர் அம்பேத்கர் என பெரியார் சொன்னார். அம்பேத்கருக்கு நிகராக வேறு யாரும் நாட்டில் இல்லை என பெரியார் கூறினார். அம்பேத்கர் புகழை போற்றியவர் கலைஞர். அம்பேத்கரின் கனவை நினைவாக்க உழைத்து வருவது திமுக அரசு. தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தூய்மை பணியாளர் அல்ல. தூய உள்ளம் கொண்ட பணியாளர்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திட்டங்களை வகுத்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தற்போதைய அரசு செயல்படுத்தும் திட்டங்களை போன்று வேறு எந்த அரசும் செயல்படவில்லை.
அம்பேத்கர் காட்டிய வழியில் திராவிட மாடல் அரசு நடை போடுகிறது. அம்பேத்கரின் சிந்தனைகளை செயல்படுத்தி வருகிறோம். சமூகத்தை பிளவு படுத்தும் எண்ணம் பலிக்காது. உங்கள் சாதி வெறி, மத வெறி வைத்து தமிழகத்தை பிளவு படுத்தும் எண்ணம் பலிக்காது.
நமது லட்சிய வழியில் ஒரு சில இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஏதோ ஒரு சம்பவம் நடந்தால் இதுதான் பெரியார் மண்ணா என கேள்வி எழுப்புகின்றனர். ” எனத் தெரிவித்தார்.
மேலும், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகளையும், 30 நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.