Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
”அதானி நிறுவனத்தையும் அதிமுகவையும் விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் அரைகுறை அரசியல்வாதிகள் தவிப்பது புரிகிறது ; அதற்குள்தான், அதிமுக - பாஜக கூட்டணி திரைமறைவில் ஒளிந்துக் கிடக்கிறது”
தொழிலதிபர் அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததாக பொய்யாக அவதூறு பரப்பினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழிலதிபர் அதானியை சந்திக்கவும் இல்லை அவருடைய தனியார் நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாக கூறினால் நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்புhttps://t.co/wupaoCzH82 | #Adani #MKStalin #TNGovt #Tamilnadu #Senthilbalaji pic.twitter.com/M3GcddFk2x
— ABP Nadu (@abpnadu) December 6, 2024
சட்ட நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை
அவதூறாக இதுபோன்ற கருத்துகளை பரப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது போலவும் அதிக விலை கொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டது போலவும் கற்பனையான கட்டுக்கதைகள்போல் வெளியிட்டு வருபவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பும் இல்லை - ஒப்பந்தமும் போடவில்லை
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் - அதானி இடையே சந்திப்பும் நடைபெறவில்லை, எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் ஒப்பந்தமும் போடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, அதிமுக ஆட்சியில் கவலைக்கிடமாக இருந்த மின்சார வாரியத்தை சீர்திருத்தி முன்னோக்கி திமுக ஆட்சியில் கொண்டுச்சென்று வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக எந்த ஒப்பந்தமும் இல்லை
திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தது முதல் மத்திய அரசு நிறுவனத்துடன் மட்டுமே ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், நேரடியாக வேறு எந்த தனியார் நிறுவனத்துடனும் தமிழக மின்சார வாரியம் ஒப்பந்தம் போடவில்லை எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் மறைப்பு - அவதூறு பரப்பாதீங்க
அதோடு, அதானியை முதல்வர் சந்திக்காதபோது, அவர் சந்தித்ததாக அவதூறு பரப்புவது என்பது வேண்டுமென்றே பொய்யான தகவல்களை மக்களிடம் கொண்டுச் சென்று, அவர்களை திசைத் திருப்பும் நடவடிக்கை என செந்திபாலாஜி கூறியுள்ளதோடு,அதானி நிறுவனத்தையும் அதிமுகவையும் விமர்சிக்க துணிச்சல் இல்லாத அரைகுறை அரசியல்வாதிகள் தவிப்பது புரிகிறது என்றும் அதற்குள்தான், அதிமுக - பாஜக கூட்டணி திரைமறைவில் ஒளிந்துக் கிடக்கிறது எனவும் செந்தில்பாலாஜி பாமக-வை மறைமுகமாக சாடி அறிக்கை விடுத்துள்ளார்.
பொய் தகவல்களை பரப்பினார் சட்ட நடவடிக்கை
இந்நிலையில், முதல்வர் அவரை சந்தித்தார், இவரை சந்தித்தார் என்று பொய் தகவல்களை இனி யாரேனும் பரப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, இதற்கெல்லாம் காரணம், திமுக மக்களுக்கு நல்லாட்சி கொடுத்துக்கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ளமுடியாததுதான் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.