நோயை போக்காமல் அலைக்கழிப்பது சரியா? வேதனையில் தவிக்கும் நோயாளிகள்.. அரசு மருத்துவமனையில் அவலம்
வயதான கூலித் தொழிலாளர்கள் அருகில் உள்ள டீக்கடைகளுக்கு சென்று ஜிபே தாங்க என்று கேட்கும் அவலநிலையும் நடக்கிறது.

தஞ்சாவூர்: வேதனையுடன் வரும் நோயாளிகளை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி அழுத்தமாக எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களை அங்கு பணி செய்யும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்வார்கள். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக இங்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தான் வருவார்கள். அவ்வாறு வரும் பொதுமக்களுக்கு மருத்துவமனையில் வரும்போது அவர்களை அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், பணியாளர்கள் அவர்களிடம் சரியான முறையில் அணுகுவது இல்லை என கூறுகிறார்கள்.
மேலும் சிடி ஸ்கேன் எடுக்கும் இடத்தில் பணம் ஜிபே மூலம் மட்டும் தான் பணம் செலுத்த வேண்டும். கையில் பணம் கொடுத்தால் வாங்க மாட்டோம் என கூறுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமமாக உள்ளது என கூறுகின்றனர். இந்த மருத்துவக்கல்லூரிக்கு வரும் மக்கள் விவசாயத் தொழிலாளர்கள். அதிலும் மிகவும் வயதானவர்கள். அவர்களுக்கு ஜிபே என்றாலே என்ன என்று தெரியாத நிலை. இதனால மிகவும் அலைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். வயதான கூலித் தொழிலாளர்கள் அருகில் உள்ள டீக்கடைகளுக்கு சென்று ஜிபே தாங்க என்று கேட்கும் அவலநிலையும் நடக்கிறது.
அதேபோல் நோயாளிகளின் உறவினர்கள் வரும்போது அவர்களிடம் பணம் கொடுத்தால் தான் உள்ளே அனுமதிபோம் என அங்கு உள்ள பணியாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் தற்போது மழை பெய்து வருவதால் நோயாளிகள் தங்கி இருக்கும் வார்டில் மழை நீர் உள்ளே வருகிறது. அதேபோல் மருத்துவமனை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது. அங்கு உள்ள கடைகளின் கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. நோயை குணப்படுத்த வேண்டிய மருத்துவமனையின் அவலம் மேலும் வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக பாலாஜி நாதன் இருந்தவரையில் மிகவும் கண்டிப்புடன், மக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள் உடனடியாக கிடைக்க பல்வேறு வழிகளிலும் நடவடிக்கை எடுத்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோயாளிகளை வாட்டி வதைத்து வருகிறது.
இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அன்று ஒரு நாள் தாங்கள் வேலைக்கு செல்லாமல் தங்களின் வருமானத்தை இழந்துதான் வருகின்றனர். அதை கூட இங்குள்ள மருத்துவர்களும், மருத்துவப்பணியாளர்களும் கொஞ்சம் கூட பொருட்படுத்துவதில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய செயலாகும்.
எனவே இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

