"ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்" மத்திய அமைச்சர் அட்வைஸ்
ஆரோக்கியமான உடல் மட்டுமே ஆரோக்கியமான மனதுக்கு வழிவகுக்கும் எனவும் ஆரோக்கியமான மனம் மட்டுமே நாட்டை வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் எனவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், 3000-க்கும் மேற்பட்டோர், ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வில் பங்கேற்றனர்.
"ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்"
32ஆவது வாரமாக நடைபெறும் இந்த நிகழ்வு, இந்த வாரம் போதைப்பொருள் ஒழிப்பு என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது. நாட்டின் இளைஞர்கள் போதைப்பொருட்களிலிருந்து விலகி இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவித்தார்.
போதைப் பொருள்கள் இல்லாத இந்தியாவை அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் என அவர் கூறினார். ஆரோக்கியமான உடல் மட்டுமே ஆரோக்கியமான மனதுக்கு வழிவகுக்கும் எனவும் ஆரோக்கியமான மனம் மட்டுமே நாட்டை வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உடல் திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமைகள் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். மாண்டவியாவுடன் மத்திய இளைஞர் நலன் விளையாட்டுத்துறை இணையமைச்சர் ரக்ஷா நிகில் காட்சே, உத்திரபிரதேசத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ். கிரீஷ் சந்திர யாதவ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் கொடுத்த அட்வைஸ்:
இன்று, கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும் 6000-க்கும் மேற்பட்ட இடங்களில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி உள்ளிட்ட பல கல்வி அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கடந்த 2024இல் தொடங்கப்பட்ட உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம் நாடு முழுவதும் தனிநபர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக பல்வேறு மிதிவண்டி ஓட்டும் சங்கங்கள் இணைந்து ஒவ்வொரு வாரமும் இதில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றன.
இந்த மிதிவண்டி ஓட்டுதல் பயணங்கள் நாடு முழுவதும் உள்ள பல கேலோ இந்தியா மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள், இந்திய விளையாட்டு ஆணையப் பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா அங்கீகாரம் பெற்ற அகாடமிகள், பிராந்திய மையங்கள், பல்வேறு தேசிய சிறப்பு மையங்கள் போன்றவற்றால் நடத்தப்படுகின்றன.





















