அம்மா கூடவே இருக்காங்க.. எப்படி ப்ரோ.. 10 வருஷத்துக்கு கல்யாணம், காதல் கிடையாது
நடனத்தால் இளைஞர்களை கவர்ந்த இளம் நடிகை ஸ்ரீலீலா திருமணம் குறித்து அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில் சென்ஷேனல் ஹீரோயினாக வலம் வரும் ஸ்ரீலீலா, பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே கார்த்திக் ஆர்யனை ஸ்ரீலீலா காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், அவரது வீட்டு நிகழ்ச்சியிலும் ஸ்ரீலீலா இருப்பது போன்ற வீடியோக்களும் வெளியாகின. இந்நிலையில், திருமணம் குறித்து ஸ்ரீலீலா பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
விஜய்க்கு நோ சொன்ன ஸ்ரீலீலா
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலுக்கு முதலில் ஆட இருந்தது ஸ்ரீலீலா தான். காரணம் குண்டூர் காரம், புஷ்பா 2 படங்களில் இவரது நடனம் ரசிகர்களை கவர்ந்தது. நடனம் என்றாலே ஸ்ரீலீலா புயலாகவே மாறி விடுவார். அதனால், விஜய்க்கு ஏத்த ஜோடியாகவும், நடனத்தில் போட்டியாகவும் இருப்பார் என கணிக்கப்பட்டது. ஆனால், தமிழில் நாயகியாக அறிமுகமாக இருப்பதால், ஒரு பாடலுக்கு நடனம் என்பது சரியாக இருக்காது என்பதை மனதில் வைத்துகொண்டு ஸ்ரீலீலா மறுத்துவிட்டார். பின்னர் பராசக்தி படத்தில் அவர் நடித்து வருகிறார்.
பாலிவுட் ஹீரோவுடன் காதல்?
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா, பாலிவுட்டில் காதலை மையப்படுத்தி உருவாகும் ஒரு படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டதாகவும் வதந்தி செய்திகள் பரவின. அதேபோன்று ஸ்ரீலீலா கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங் செல்வதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் சினிமா விழாவில் பங்கேற்ற கார்த்திக்கின் தாயார் அளித்த பேட்டியும் காரணமாக பார்க்கப்பட்டது. சமீபத்தில் ஸ்ரீலீலா மணப்பெண் போல அலங்கரித்திருந்த புகைப்படங்கள் வைரலானது. இதைப் பார்த்த சிலர் திருமணம் முடிந்துவிட்டது என்று தெரிவித்தனர். அவரை கூடையில் தூக்கி வரும் புகைப்படமும் பரவியது.
10 வருடத்திற்கு பிறகு கல்யாணம்
இதுதொடர்பாக சமீபத்தில் ஸ்ரீலீலா அளித்த பேட்டியில், அது எனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அது எங்கள் பாரம்பரியம் என தெரிவித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜூனியர் திரைப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பட விழாவில் பேசிய ஸ்ரீலீலாவிடம் செய்தியாளர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், எனக்கு இப்போது 23 வயது தான் ஆகிறது. 10 வருடங்களுக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. நான் காதலில் இருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், என்னுடைய அம்மா என் கூடவே இருக்கிறார். அம்மா கூடவே இருக்கும்போது எப்படி காதலில் விழ முடியும்? என்றும் தெரிவித்துள்ளார்.





















