IIT Madras: இலகுவாக இயங்கும் சக்கர நாற்காலி- ஐஐடி சென்னை அசத்தல் அறிமுகம்!
சக்கர நாற்காலி சரியாகக் கட்டமைக்கப்படும்போது, சுமையாக அல்லாமல் சுதந்திரம், இயக்கம் ஆகியவற்றுடன் சமூகத்தில் முழு பங்கேற்பை செயல்படுத்துவதாக அமைகிறது.

ஐஐடி மெட்ராஸ், இந்தியாவின் மிக இலகுவான ‘இயங்கும் சக்கர நாற்காலி’யை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச தரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ‘ஒய்டி ஒன்’ (YD One), பயனர்கள் ஒவ்வொருவரின் உடல், தோரணைக்கு ஏற்ப முற்றிலும் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. அதன் இலகுவான துல்லிய வடிவமைப்பு அதிகபட்ச வலிமையையும் ஆற்றல் செயல்திறனையும் வழங்குகிறது.
ஒய்டி ஒன் அறிமுகம்
ஐஐடி மெட்ராஸ் ‘ஒய்டி ஒன்’ (YD One) என்ற இந்தியாவிலேயே மிக இலகுவான இயங்கும் சக்கர நாற்காலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு துல்லியமாகக் கட்டமைக்கப்பட்ட இந்த ‘மோனோ-டியூப் ரிஜிட் ஃபிரேம்’ சக்கர நாற்காலி உலகளவில் தலைசிறந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ‘ஒய்டி ஒன்’, ஒவ்வொரு பயனாளியின் உடல், தோரணை, தினசரி இயக்கத் தேவைகளுக்கு ஏற்ப முழுமையாகத் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. வெறும் 9 கிலோகிராம் எடை கொண்ட இதன் மிக இலகுரக, துல்லியமான வடிவமைப்பு அதிகபட்ச வலிமையையும் ஆற்றல் திறனையும் வழங்குகிறது, இருப்பினும் கார்கள், ஆட்டோக்கள், பொது போக்குவரத்து போன்றவற்றில் தூக்குதல், கையாளுதல், அடுக்கி வைப்பதை எளிதாக்குகிறது.
சமூகத்தில் முழு பங்கேற்பு
உலகம் முழுவதும் பெரும்பாலும் இயலாமையின் உலகளாவிய அடையாளமாக சக்கர நாற்காலி காணப்படுகிறது. பயனரைக் கட்டுக்குள் வைக்கும்படியோ, கட்டுப்படுத்தும்படியோ இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டியது அவசியம். சக்கர நாற்காலி, சரியாகக் கட்டமைக்கப்படும்போது, சுமையாக அல்லாமல் சுதந்திரம், இயக்கம் ஆகியவற்றுடன் சமூகத்தில் முழு பங்கேற்பை செயல்படுத்துவதாக அமைகிறது.
இருப்பினும், பல லட்சக்கணக்கானோரின் உண்மைநிலை இன்னும் மோசமாகவே உள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் குறுகிய கால உட்புறப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட கனமான, பொருத்தப்படாத மருத்துவமனை பாணி சக்கர நாற்காலிகளையே நம்பியுள்ளனர். இந்த வகையான நாற்காலிகள் சுதந்திரமாக நடமாடுவதை மேலும் கடினமாக்குகின்றன. வசதி, சுதந்திரம், கண்ணியத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மற்றவர்கள் தள்ளிச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இந்த யதார்த்தத்தை மாற்றியமைக்கும் விதமாக அமைந்துள்ளது ஒய்டி ஒன்.
உலகை விரிவாக்கும் ஒய்டி ஒன்
துல்லியமாக வடிவமைக்கப்பட்ட வடிவியல், விண்வெளித் தர பொருட்களால் கட்டமைக்கப்பட்ட இந்த இயங்கு நாற்காலி, விலையுயர்ந்த இறக்குமதிகள் மூலம் மட்டுமே சாத்தியமான உயர் செயல்திறன், அல்ட்ரா-லைட் இயக்கத்தை வழங்குகிறது. ஆனால் இதற்கு ஆகும் செலவோ குறைவு. எளிமையாகவும், அழகாகவும், முழுமையாக தனிப்பயனாக்கப்பட்டதாகவும் ஒய்டி ஒன் அமைந்துள்ளது. பயனர்கள் இதனை சுமையாகக் கருதாமல், சொந்தமாக வைத்திருப்பதில் பெருமை கொள்ளக்கூடியது. அவர்களின் உலகத்தை சுருக்குவதற்கு பதிலாக விரிவுபடுத்தக் கூடிய சாதனம் என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.






















