நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
காலியாக உள்ள 2430 இடங்களுக்கு நிரந்தர ஆசிரியர் அரசுப் பணி அளிக்கப்படும். இதற்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 24ஆம் தேதி அன்று வழங்குவார்.

காலியாக உள்ள 2430 இடங்களுக்கு நிரந்தர ஆசிரியர் அரசுப் பணி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்ற தலைமையாசிரியர்களுடனான கற்றல் அடைவு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆசிரியர் காலி இடங்கள் நிரப்புவது குறித்து இன்று அவர் பேசியதாவது:
நியமன ஆணைகளை அளிக்கும் முதல்வர் ஸ்டாலின்
பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். காலியாக உள்ள 2430 இடங்களுக்கு நிரந்தர ஆசிரியர் அரசுப் பணி அளிக்கப்படும். இதற்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 24ஆம் தேதி அன்று வழங்க உள்ளார். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அதிக நியமனம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.
முன்னதாக இன்றைய நிகழ்ச்சியில், ‘தமிழ்நாடு வாழ்க’ என முழக்கமிடப்பட்டது. அமைச்சர் அன்பில், ’தமிழ்நாடு’ எனச் சொல்ல தலைமையாசிரியர்களும், மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் ‘வாழ்க’ என முழக்கமிட்டார்கள்.
முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஜவ்வாது மலை பட்டறைக்காடு கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களைப் பார்வையிட்டு, புதிதாக கட்டப்படவுள்ள மாணவர் விடுதி குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ப வடிவ இருக்கை முறை கட்டாயம் இல்லை
அப்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில், ''பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை. இருக்கை முறையை, ப வடிவத்துக்கு மாற்றிப் பாருங்கள். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், அதை பின்பற்றிக் கொள்ளலாம் என்றே தெரிவித்துள்ளோம்.
தொடக்கப் பள்ளிகளில் ஏற்கெனவே ப வடிவ இருக்கை முறையில்தான் மாணவர்களை அமர வைத்து இருக்கிறோம். அந்த விதத்தில் குழந்தைகளை ப வடிவத்தில் உட்கார வைத்தால், கவனம் அதிகமாக இருக்கும் என்பதால் தெரிவித்தோம். இந்த முறை கட்டாயம் கிடையாது'' என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






















