Amarnath Ramakrishna: கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
கீழடி ஆய்வறிக்கையில் எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்துகிறேன், ஆனால் உண்மையை திருத்த முடியாது என்று கூறி மத்திய அரசிடம் அதிரடி காட்டியுள்ளார் தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ஐஏஎஸ்.

கீழடியில், 2013 முதல் 3 ஆண்டுகள் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு, ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார், மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. இந்த நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கிமு 8-ம் நூற்றாண்டு என்பதை மத்திய அரசு திருத்தச் சொல்வதாகவும், ஆனால் தான் அதை செய்ய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
“எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்துகிறேன், உண்மையை திருத்த முடியாது“
ஐஏஎஸ் அதிகாரியும், தொல்லியல் ஆய்வாளருமான அமர்நாத் ராமகிருஷ்ணா, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என தெரிவித்துள்ளார்.
“நான் கண்டுபிடித்ததை திருத்தினால் நான் குற்றவாளி ஆகிவிடுவேன்“ என கூறியுள்ள அவர், தான் தாக்கல் செய்த 982 பக்க அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகளை வேண்டுமானால் திருத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் உண்மையை திரித்து எழுத முடியாது என்றும் மத்திய அரசிற்கு அதிரடியான, திட்டவட்டமான பதிலை தெரிவித்துள்ளார்.
கிமு 8-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததை, கிமு 3-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தவை என மாற்றுமாறு மத்திய அரசு வலியுறுத்துகிறது. நான் கண்டுபிடித்த விஷயங்களையே மாற்றச் சொன்னால், கீழடியின் தொன்மையை சிதைக்கும் செயலாகும் என அமர்நாத் குறிப்பிட்டுள்ளார்.
தனது அறிக்கையை, மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முதலில் படிக்கட்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் உள்ளன என்றும், அதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்று அமர்நாத் தெரிவித்துள்ளார்.
சிந்து சமவெளி நாகரீகம், வேத காலம், மவுரிய, ஹர்ஷவர்தன் காலத்தையே மத்திய அரசு பேசி வருவதாக விமர்சித்துள்ள அவர், ஆனால் சங்க கால வரலாற்றை பற்றி ஏன் மத்திய அரசு ஆய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 3-வது கட்ட அகழாய்வில் ஈடுபட்ட ஸ்ரீராம், கீழடி அகழாய்வு குறித்து எந்த பின்னணியும் தெரியாதவர் என்றும், அவரை ஆய்வு செய்யச் சொன்னால், அவர் ஒன்றும் இல்லை என்று தான் சொல்வார் என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியுள்ளார்.
கீழடியில் நடந்த அகழாய்வு
சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை, மத்திய அரசு சார்பில், அகழாய்வுப் பணியை மேற்கொண்டார், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. அந்த அகழாய்வின் போது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன.
அங்கு கண்டறியப்பட்ட மனித மண்டை ஒட்டை வைத்து, நம் மூதாதையர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இருந்ததற்கான அடையாளங்களும், பருத்தி, திணை அரிசி விளைச்சல் உள்ளிட்டவைகளும் நடைபெற்றது கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கிமு 8-ம் நூற்றாண்டில் என்னென்ன பயன்படுத்தப்பட்டது, அந்த கால மக்களின் நாகரிகம், கலாசாரம், பழக்கவழக்கம், விவசாயம், விலங்குகள், இரும்பு பயன்பாடு என பல்வேறு விஷயங்கள் குறித்தெல்லாம் கண்டுபிடித்து, மத்திய அரசிற்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார் அமர்நாத் ராமகிருஷ்ணா.
இந்த சூழலில் தான், மத்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பணிபுரிந்துவந்த அமர்நாத் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த ஆய்வு அறிக்கையை கிமு 3-ம் நூற்றாண்டு என திருத்துமாறு, மத்திய அரசு, அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கீழடி தொல்லியல் பொறுப்பாளராக ஸ்ரீராம் என்பவர் நியமிக்கப்பட்டு, அவர் 3-ம் கட்ட அகழாய்வு நடத்தி, அமர்நாத் குறிப்பிட்டபடி அங்கு எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





















