ஜி.வி. பிரகாஷை பார்த்து ஆச்சர்யம்.. இந்த வயதில் இப்படி ஒரு பண்பா.. வசந்தபாலன் ஓபன் டாக்
பிளாக்மெயில் பட விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் வசந்தபாலன் ஜி.வி.பிரகாஷ் மீதான பேரன்பை கொட்டி தீர்த்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜூ அஸ்வினி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிளாக் மெயில் திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் டி.இமான் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார். மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் வசந்தபாலன் ஜி.வி.பிரகாஷை பாராட்டி பேசியிருக்கிறார்.
பிளாக்மெயில் என்னை ஈர்த்தது
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், பிளாக்மெயில் படத்திற்கான அழைப்பு வந்தபோது. அந்த படத்தின் டைட்டில் என்ன மிகவும் ஈர்த்தது. வெயில் படத்தில் பணியாற்றும் போது ஜி.வி. சின்ன பையனாக இருந்தார். 17 வயதில் பார்த்த பையனாக இருந்த ஜி.வி.யின் வளர்ச்சியை பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஜி.வி.யுடன் ஒரு படம் பணியாற்றியதை நினைத்து எப்போது பெருமையாக நினைப்பேன். என்னுடைய படங்களில் அவர் பணி செய்யாமல் வேறு இயக்குநரின் படங்களில் இசையமைத்திருந்தாலும் கண்டிப்பாக உயர்ந்த இடத்தை அடைந்திருப்பார். ஜி.வி. இதுவரை யாரிடமும் கோபம் கொள்ளாத, யாரையும் வெறுக்காத, காயப்படுத்தாத பண்புடைய குணத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறேன் என வசந்தபாலன் தெரிவித்தார்.
ஜி.வி.பிரகாஷின் பேரன்பு
மேலும் பேசிய வசந்தபாலன், அதே நேரத்தில் இசையமைப்பாளராக, நடிகராக ஜி.வி.பிரகாஷ் பல படங்களுக்கு விட்டு கொடுத்திருக்கிறார். எனது இரண்டு படங்களுக்கு அவர் விட்டு கொடுத்திருக்கிறார். அவர் மட்டும் அன்று விட்டுகொடுக்கவில்லை என்றால் அந்த படங்கள் வெளியாகி இருக்காது. இந்த பேரன்பிற்காகவே ஜி.வி.பிரகாஷ் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும். அதுமட்டும் அல்ல அவரது குடும்ப பிரச்னையில் நாகரீகமாக நடந்துகொண்டார் என்பதை ஒரு வீடியோவில் பார்த்து விட்டு, அவருக்கு போனில் அழைத்து உங்களை பார்த்து ஆச்சர்யமாக இருக்கிறது என்று சொன்னேன். இதுபோன்ற ஒருவர் சினிமாவில் இருக்க வேண்டும். அவரது பேரன்புதான் என்னையும் இங்கு நிற்க வைத்திருக்கிறது என வசந்தபாலன் தெரிவித்தார்.





















