ஜாகுவார், மெர்சிடிஸ், ஆஸ்டின் ஹியலி கார்களில் உலா: தஞ்சையில் வெளிநாட்டு பயணிகளுக்கு வரவேற்பு
22 பழமையான கார்களில் வந்த 45 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தஞ்சாவூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்: 22 பழமையான கார்களில் வந்த 45 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தஞ்சாவூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பின்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் 45 பேர் புருனோ என்பவர் தலைமையில் 22 பழமையான கார்களில் நம் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 14ம் தேதி கோவாவில் துவங்கிய இந்த பழமை வாய்ந்த பயணம் ஹூப்ளி, ஹாம்பி, சிக்மகளூரு, கூர்க், மைசூர் வழியாக, நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு கடந்த 21ம் தேதி வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து பல இடங்களுக்கு சென்று நேற்று 29ம் தேதி தஞ்சாவூர் வந்த இந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துகுமார் ஆகியோர் சந்தனமாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்று புதுச்சேரிக்கு வழி அனுப்பி வைத்தனர்.
ஜாகுவார், மெர்சிடிஸ், ஆஸ்டின் ஹியலி, லகோண்டா, ஆல்வீஸ், போர்க்ஷ், பென்ட்லி, ஆல்ஃபா ரோமியோ, வோல்வோ உட்பட பழமையான 22 வகையான கார்களில் இந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 2606 கி.மீ பயணமாக தஞ்சையை வந்தடைந்தனர். இவர்கள் வந்த கார்களை ஆச்சர்யத்துடன் பார்த்து கார் அருகில் நின்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த சுற்றுலாப்பயணிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லாமல் கிராமப்புற சாலைகளில் செல்கின்றனர். வரும், 1ம் தேதி சென்னையை சென்றடைகின்றனர். நம் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.