மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை?
பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி சேரும்பட்சத்தில் அது திமுகவுக்கு பெரும் பிளஸ் ஆக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அதோடு, விஜயின் தவெகவும் இதனால் பயன் அடையும் என கூறப்படுகிறது.

டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவை சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் பல விதமான ஊகங்களுக்கு வழி வகுத்துள்ள நிலையில், இரண்டு கட்சிகளும் மீண்டும் கூட்டணி சேர்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி சேரும்பட்சத்தில் அது திமுகவுக்கு பெரும் பிளஸ் ஆக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அதோடு, விஜயின் தவெகவும் இதனால் பயன் அடையும் என கூறப்படுகிறது.
டெல்லியில் முக்கிய சந்திப்பு:
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் அதற்கு தயாராகி வருகின்றன. ஒருபுறம் கூட்டணி, வியூகம், வாக்குறுதி என திமுக பக்காவாக வேலை செய்து வருகிறது. மறுபுறம், எதுவும் உறுதியாகாத நிலையில், அதிமுக தவித்து வருகிறது.
இந்த நிலையில்தான், டெல்லியில் நடந்த முக்கிய சந்திப்பு தமிழ்நாட்டு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவை சந்தித்து பேசி இருக்கிறார்.
இருவரும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே, கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தே அதிமுக போட்டியிட்டது. இரண்டிலும் படுதோல்வி.
கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, தனியே கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதிலும் தோல்வி. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக தெரிகிறது.
திமுகவுக்கு ஜாக்பாட்:
கூட்டணி விவகாரம் தொடர்பாக அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே. ஏ. செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே மோதல் நிலவி வந்ததாக கூறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்த்து, பாஜகவுடன் கூட்டணி அமைக்க செங்கோட்டையன் அழுத்தம் தந்ததாக கூறப்பட்டது.
இச்சூழலில், அதிமுகவில் ஒரு பிரிவினரின் விருப்பத்திற்கு ஏற்ப பாஜகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டதாக பேசப்படுகிறது. இருப்பினும், ஓ. பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை அதிமுகவில் சேர்க்க அவர் விரும்பவில்லை என கட்சி வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அது திமுகவுக்கு பெரும் பிளஸ் ஆக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அதாவது, சிறுபான்மை வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு சென்றுவிடும் என கூறப்படுகிறது.
அதேபோல, ஆட்சி மீதான அதிருப்தியால் அதிமுகவை நோக்கி வந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச மதச்சார்பற்ற வாக்குகள், மீண்டும் கிளம்பிய இடத்துக்கோ வேறு இடத்துக்கோ போகும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தவெக நிலைமை என்ன?
இந்தி ஆதிக்கம், மாநிலத்துக்குப் நிதி தராமல் இழுத்தடிப்பது, தொகுதி மறுசீரமைப்பு போன்ற விவகாரங்களில் மாநிலத்தில் ஒட்டுமொத்த வெறுப்பை பாஜக சம்பாதித்து வைத்திருக்கும் நேரத்தில், அதில் பங்கு வாங்கப் போயிருக்கும் அதிமுகவுக்கு இது நிரந்தரப் பின்னடைவு என்றும் கூறப்படுகிறது.
ஆனால், பாஜகவின் குறிப்பிடத்தகுந்த வாக்குகள் அதிமுகவுக்கு குறிப்பிட்ட தொகுதிகளில் பலமாக அமையலாம் என்றும கூறப்படுகிறது. இந்த இரண்டையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதிமுக - பாஜக கூட்டணி திமுகவுக்கு பெரும் பிளஸ் ஆக மாறி இருக்கிறது.
இதை தவிர, புதிதாக அரசியலில் நுழைந்துள்ள தவெகவுக்கும் இது கொஞ்சம் பலன் தரலாம் என கூறப்படுகிறது. திமுக மீது அதிருப்தியில் உள்ளவர்கள், பாஜகவுக்கு வாக்கு செலுத்த விரும்பாதவர்களின் வாக்குகள் இதனால் தவெகவுக்கு செல்லும் என கூறப்படுகிறது. இதனால், பிரதான எதிர்க்கட்சியாக தவெக மாறுவதற்கான வாய்ப்புகள் கூட இருப்பதாகக் கூறப்படுகிறது.

