Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
IPL CSK vs RR: சென்னை அணியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ள விஜய் சங்கர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக தன்னை நிரூபிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

IPL 2025 CSK vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு புது வீரர்களுடன் ஒவ்வொரு அணியும் களமிறங்கியுள்ளன. இந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் சங்கர் உள்பட பல்வேறு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
சென்னை அணியில் விஜய் சங்கர்:
சென்னையில் நடந்த முதல் போட்டியில் சென்னை அணி மும்பைக்கு எதிராக வெற்றி பெற்றாலும், அடுத்து சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்சிபி அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சொந்த மைதானத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி அணியிடம் சென்னை அணி தோற்றது கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
குறிப்பாக, ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்த தீபக் ஹுடா, ராகுல் திரிபாதி ஆகியோரின் ஆட்டம் கேள்விக்குறியானது. சென்னை அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாக இருந்தது கடந்த போட்டியில் கண்கூடாக தெரிந்தது. இதனால், ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தது போலவே சென்னை அணியில் தீபக் ஹுடா, சாம் கரண் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆல்ரவுண்டர்கள் விஜய் சங்கர், ஓவர்டன் களமிறக்கப்பட்டுள்ளனர். ஓவர்டன் இங்கிலாந்து அணியின் வீரர் ஆவார். 2019ம் ஆண்டு இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் ஆடியவர் விஜய் சங்கர்.
சாதிப்பாரா?
இவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்காக ஓரளவு சிறப்பாக ஆடினார். இந்த நிலையில், சென்னை அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ள விஜய் சங்கர் அணியில் தொடர்ந்து நீடிக்க, தன்னை நிரூபித்துக் கொள்ள கட்டாயம் சிறப்பாக ஆட வேண்டும். மிடில் ஆர்டரில் இவர் அதிரடி காட்டினால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும்.
பதிரானா, கலீல் அகமது, ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது உள்ளதால் இவருக்கு பந்துவீசும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும். இதனால், பேட்டிங்கில் இவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். பந்துவீசும் வாய்ப்பு கிடைத்தாலும் அவர் சிறப்பாக வீச வேண்டும். இல்லாவிட்டால் அவரது வாய்ப்பு மீண்டும் பறிக்கப்படும்.
நிலை மாறுமா?
விஜய் சங்கர் இதுவரை 72 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1115 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும். மேலும் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதிரடியாக ஆடும் திறன் விஜய் சங்கரிடம் இருந்தாலும் அவர் இதுவரை தன்னை எங்கும் பெரியளவில் நிரூபிக்காத காரணத்தால் அவரது இடம் அணியில் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்த நிலை மாற அவர் சென்னை அணிக்காக சிறப்பாக ஆட வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.



















