Ganja Arrest: என்ன நடக்குது தமிழ்நாட்டில்..! தஞ்சையில் மொத்தமாக சிக்கிய 300 கிலோ கஞ்சா, போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்
Ganja Arrest: தஞ்சாவூரில் லாரியில் கடத்திய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Ganja Arrest: தஞ்சாவூரில் லாரியில் வைத்து கடத்தி வரப்பட்ட, 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
300 கிலோ கஞ்சா பறிமுதல்:
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக தஞ்சாவூர் சிறப்பு தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது கன்டெய்னர் லாரியில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு கஞ்சா மாற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
3 பேர் கைது:
இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் இரண்டு வாகனங்களையும் சோதனை செய்ததில் ஆந்திராவில் இருந்து 300 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து கண்டெய்னர் லாரி மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா கடத்தி வந்த அண்ணாதுரை, தர்மராஜ் மற்றும் முத்தையா ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கஞ்சா எங்கிருந்து கடத்தி வறப்பட்டது என பல்வேறு கோணங்களில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் 10 பேர் கைது
கோவையில் ஆத்துப்பாலம் அருகே உள்ள சுண்ணாம்பு காள்வாய் பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில், அவர் போதை மாத்திரைகளை விற்கும் கும்பலை சேர்ந்தவர் என்பதும், வெளிமாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி அவற்றை கோவைக்கு கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் தந்த தகவல்களின் படி, போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகள், கஞ்சா, ஊசி, 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 10 பேரும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.
அச்சத்தில் பொதுமக்கள்:
தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா வேட்டை என்ற பெயரில் பல சோதனைகளை நடத்தினாலும், கஞ்சா விற்பனைய் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டதாகவோ அல்லது கட்டுப்படுத்தப்பட்டதாகவோ தெரியவில்லை. குறிப்பாக இளைஞர்கள் இதுபோன்ற போதைப் பொருட்களுக்கு அதிகம் அடிமையாவதால், தமிழ்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் சூழல் நிலவுகிறது.