அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையால் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, 2 நாட்களில் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு.

சிவகங்கையில், காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றபோது, பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சரமாரியான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இச்சம்பவம் தொடர்பாக 2 நாட்களில் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
“சாதாரண கொலை போல் தெரியவில்லை, 44 இடங்களில் காயம், ஒரு பாகத்தையும் விட்டுவைக்கவில்லை“
சிவகங்கை மடப்புரத்தில், காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், இது சாதாரண கொலை வழக்கு போல் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
அஜித்குமாரின் உடலில் எந்த பாகத்தையும் போலீசார் விட்டு வைக்கவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், காவலர்கள் கூட்டாக சேர்ந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.
“மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்துள்ளது“
மேலும், மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்துள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். அதோடு, இந்த நிகழ்வுக்கான மூல காரணம் யார், தாக்குதல் சம்பவத்தின் இயக்குநர் யார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காவல்துறையில் இன்னும் யாரெல்லாம் இந்த நிகழ்வில் தொடர்புடயவர்கள் என்றும், காவலர்களுக்கு உத்தரவிட்டது யார், தனிப்படையை அனுப்பியது யார், ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றெல்லாம் அரசு தரப்பிற்கு சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், FIR பதிவு செய்யப்படாமல் சிறப்புப் படை போலீசார் வழக்கை கையில் படுத்தது எப்படி என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அஜித்குமார் மரணம் எனும் கொடூரத்திற்கு காரணமான உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில்தான், மானாமதுரை டி.எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவிலின் சிசிடிவி காட்சிகள் சமர்ப்பிப்பு
இந்த விசாரணையின் போது, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சிப் பதிவுகளை சிடி-யாக தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, அஜித்திற்கு காது, மூக்கில் ரத்தம் வரும் அளவிற்கு தாக்கப்பட்டுள்ளார், அதனால் சம்பவ இடத்தில் ரத்தக் கரையோ, சிறுநீர் இருந்ததற்கான அடையாளமோ இருந்ததா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆனால், அப்படி ஏதும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்படியானால், சாட்சியங்களை பாதுகாக்கத் தவறிய காவல்துறை அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசுக்கு 2 நாட்கள் கெடு
இந்நிலையில், அஜித் கொலை வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் நிலை அறிக்கையை 2 நாட்களில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அஜித்குமார் போலீசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒவ்வொரு நாளும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்று ஒரு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், அந்த வீடியோவை எடுத்த இளைஞரும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளித்துள்ளார். கோவிலின் பின்புறமுள்ள கழிவறைக்கு தான் சென்றபோது அந்த வீடியோவை எடுத்ததாக கூறியுள்ள அவர், சிறிது நேரத்தில் பயம் வந்ததன் காரணமாக அங்கிருந்து வந்துவிட்டதாகவும், போலீசாரின் கொடூர தாக்குதல் குறித்தும் தெரிவித்துள்ளார்.
கோவிலின் சிசிடிவி காட்சிகளில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அந்த வீடியோ வந்தால், பெரும் அதிர்வலைகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவு
இந்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கில் தொடர்புடைய அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும், எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை அறிக்கையை 8-ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்து நிதிபதிகள் உத்தரவிட்டனர்.




















