Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
அஜித்குமார் கொல்லப்பட்டது நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அஜித் குடும்பத்தினரிடம் பேசி, தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

சிவகங்கை அருகே, காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி எரியும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய காவலர்களை அரசு சிறையில் அடைத்துள்ள நிலையில, அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
நேரில் சென்ற அமைச்சர், தொலைபேசியில் தொடர்புகொண்ட முதலமைச்சர்
சிவகங்கை மடப்புரத்தில், கோவில் காவலாளியாக பணியாற்றிவந்த அஜித்குமாரை, விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரை கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரை தாக்கிய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர், அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதோடு, அரசின் நிவாரணங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து, தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரனுடன் பேசினார். அப்போது, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அஜித்குமாரின் சகோதரருக்கு நிரந்தர வேலை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த உரையாடலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.
கடமை தவறி குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!
— M.K.Stalin (@mkstalin) July 1, 2025
கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்! pic.twitter.com/YhECfZx6v9
வழக்கை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவு
முன்னதாக, அஜித்குமார் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கில் தொடர்புடைய அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும், எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, விசாரணை அறிக்கையை 8-ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
“சாதாரண கொலை போல் தெரியவில்லை, 44 இடங்களில் காயம்“
இந்த வழக்கின் விசாரணையின் போது, அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், இது சாதாரண கொலை வழக்கு போல் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
அஜித்குமாரின் உடலில் எந்த பாகத்தையும் போலீசார் விட்டு வைக்கவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், காவலர்கள் கூட்டாக சேர்ந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளதாக கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.





















