6 மணி நேரத்தில் ரூ.20 லட்சம் நிதி திரட்டிய யூடியூப்பர்ஸ்; ஆக்சிஜன் மையத்திற்கு வழங்குகிறார்கள்!
6 மணி நேரத்தில் இருபது லட்சம் ரூபாய் நிதி திரட்டிய யூடியூப்பர்ஸ், அதை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்கும் பணிக்கு வழங்க உள்ளனர்.
முதல்முறையாக பல YouTubers-கள் இணைந்து பிரம்மாண்ட தொடர் நேரலை மூலம் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்காக ரூ.20 லட்சத்துக்கு மேல் நிதி திரட்டியுள்ளனர். நாட்டில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்தது. முக்கியமாக ஆக்சிஜன் பற்றாக்குறையல் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், முதல்முறையாக பல Tamil Digital creators Association இணைந்து அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் மையத்திற்காக நிதி திரட்டுவதற்காக 'We For o2' என்று நேற்று பிரம்மாண்ட தொடர் நேரலை நடத்தினர். மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் டிஜிட்டல் ஊடகத்தில் தொடர்ந்து இயங்கி வரும் முன்னணி யூடிபர்கள் பலஃப்ர் இதில் கலந்து கொண்டனர். 6 மணி நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் ரூ.20 லட்சத்துக்கு மேல் நிதியை திரட்டியுள்ளனர். மக்களிடமிருந்து வாங்கப்பட்ட இந்த நிதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைப்பதற்காக கொடுக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ‛இது சாதாரண சம்பவம் அல்ல... மக்களால் உருவாகி மக்களுக்கு சேவை செய்கிறது டிஜிட்டல் ஊடகங்கள், வாழ்த்துக்கள்,’ என பலரும் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரித்து வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இது மாதிரியான முயற்சி மேலும் பலருக்கு ஊக்கமாக அமையும்.
முன்னதாக, நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தது. டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முதலில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதற்காக நோயாளிகளின் உறவினர்கள் வரிசையில் நின்ற காட்சிகள் இன்னும் நம் கண்ணை விட்டு அகலவில்லை. அதன்பிறகே, ஆக்சிஜனின் முக்கியத்துவத்தை பல மாநிலங்கள் உணரத் தொடங்கின.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு, கர்நாடக போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டது. கடந்த மே 5ஆம் தேதி தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போதுதான், வடநாட்டில் நிலவிய சம்பவம்போல, இங்கும் பீதி பற்றியது.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி; தற்காலிக பயனா? நிரந்தர தீர்வா? இனி நடப்பது என்ன?
பின்னர், தமிழ்நாட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பங்களும் ஏற்படத் தொடங்கின. தங்களுக்கு தெரிந்த நண்பருக்கு, நண்பரின் உறவினருக்கு ஆக்சிஜனுடன் படுக்கை தேவைப்படுகிறது, யாராவது உதவுங்கள் என்று பலர் சமூகவலைதளங்களில் கேட்பது தொடங்கியது. இதில், சிலருக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைத்தும், சிலருக்கு கிடைக்காமல், பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற சோகச் செய்திகளும் வந்தன.
இதனைத் தொடர்ந்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டும். மருத்துவ உயர்தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றை தொழில்கூட்டு முயற்சி மூலம் உருவாக்க வேண்டும். உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆதரவளிக்கும். குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டதுடன், ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மே 31ஆம் தேதிக்குள் விருப்ப கருத்துகளை கேட்டுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.