தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி; தற்காலிக பயனா? நிரந்தர தீர்வா? இனி நடப்பது என்ன?
கொரோனா முதல் அலையின் போது மாநில அரசுகளுக்கு எவ்வித அதிகாரமும் தராமல், இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாகி வருவதால், ‛மாநில அரசுகள் உலகளவிய டெண்டர் விட்டுக்கொள்ளுங்கள், நீங்களே அனைத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்,’ என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. இந்த அனுமதியை முதல் அலையின் போதே வழங்கியிருந்தால், இந்தப் பிரச்னைக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முதலில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதற்காக நோயாளிகளின் உறவினர்கள் வரிசையில் நின்ற காட்சிகள் இன்னும் நம் கண்ணை விட்டு அகலவில்லை. அதன்பிறகே, ஆக்சிஜனின் முக்கியத்துவத்தை பல மாநிலங்கள் உணரத் தொடங்கின.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு, கர்நாடக போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டது. கடந்த மே 5ஆம் தேதி தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போதுதான், வடநாட்டில் நிலவிய சம்பவம்போல, இங்கும் பீதி பற்றியது.
பின்னர், தமிழ்நாட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பங்களும் ஏற்படத் தொடங்கின. தங்களுக்கு தெரிந்த நண்பருக்கு, நண்பரின் உறவினருக்கு ஆக்சிஜனுடன் படுக்கை தேவைப்படுகிறது, யாராவது உதவுங்கள் என்று பலர் சமூகவலைதளங்களில் கேட்பது தொடங்கியது. இதில், சிலருக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைத்தும், சிலருக்கு கிடைக்காமல், பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற சோகச் செய்திகளும் வந்தன.
ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழக்கும் இந்த நேரத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையை திறக்கலாம், அதனை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் என நீதிமன்றம் யோசனை கூறியதை அடுத்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, தமிழ்நாட்டில் ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீர்மானம் போட்டு ஆலையை திறக்க உத்தரவிட்டார். அதன் பின்னர், கடந்த 13ஆம் தேதி ஆக்சிஜனுக்காக திறக்கப்பட்ட ஆலை, சில தினங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
‘கொரோனா மருந்துகளை தமிழகத்திலேயே உருவாக்கலாம். ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டும். மருத்துவ உயர்தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றை தொழில்கூட்டு முயற்சி மூலம் உருவாக்க வேண்டும். உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆதரவளிக்கும். குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டதுடன், ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ஆம் தேதிக்குள் விருப்ப கருத்துகளை கேட்டுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும்போது, நமது மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதன்பிறகு, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னில் இருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும், இன்னும் கூடுதலாக ஆக்சிஜன் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே, போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைத்திடவும், பிற மாநிலங்களில் உள்ள எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து தமிழகத்திற்கு ரயில்கள் மூலமாக ஆக்சிஜனைக் கொண்டு வருவதற்கும், அவ்வாறு பெறப்படும் ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்குச் சீராக விநியோகம் செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்திடுமாறு தொழில் துறைக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
சன் நியூஸ் தொலைக்காட்சியில் கேள்விக் களம் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி உற்பத்தி சாத்தியமாகுமா? என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் “கொரோனா முதல் அலையின் போது மத்திய மாநில அரசுகளுக்கு எந்தவித உதவியும் வழங்காத நிலையில், தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் உலகளவிய டெண்டர் விட்டுக்கொள்ளலாம். நீங்களே அனைத்தும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தற்போது மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை முதல் அலையின்போதே மத்திய அரசு வழங்கியிருந்தால், இந்தப் பிரச்னைக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டிருக்கும்” என்று பேசினார்.
பொதுநல மருத்துவர் பிரகாச மூர்த்தி பேசுகையில், “கொரோனா முதல் அலையின்போது ஆக்சிஜன் தேவைப்படவில்லை. ஆனால், உருமாறிக்கொண்டு வரும் கொரோனா வைரஸின் வீரியத்தன்மை அதிகமாகிக் கொண்டே போவதால் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மூன்றாவது அலையின்போது ஆக்சிஜன் தேவை இன்னும் அதிகமாகும். மேலும், குழந்தைகளை அதிகம் பாதிக்கும். கிராம புறங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
இப்போதைய ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள இடைக்கால நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும் தவிர, தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் விதத்திலான திட்டமிடல் தேவையற்றது என்று கூறப்படுகிறது.
கொரோனா முதல் அலையின்போதே, ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்காமல் இருந்ததன் காரணமாக, தற்போது இரண்டாவது அலையின்போது இந்த பற்றாக்குறைகளை சந்தித்து வருகிறோம். மேலும், மூன்றாவது அலை கட்டாயம் வரும் என்று கூறப்படுவதால், கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு எதிர்காலத்தின் நன்மையை பயக்கும் என்று ஒரு சாரார் கருத்து கூறுகின்றனர். மேலும், இந்த திட்டங்கள் எல்லாம் மருத்துவம் சார்ந்தது என்பதால் எக்காலத்துக்கும் இது உதவிகரமாகவே இருக்கும் என்றும் கூறுகின்றனர்.